Last Updated : 18 Jun, 2015 05:24 PM

 

Published : 18 Jun 2015 05:24 PM
Last Updated : 18 Jun 2015 05:24 PM

உ.பி. பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டார்: பெண் பிறழ் சாட்சியம்

உத்திரப் பிரதேச அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவின் தவறுகளை அம்பலப்படுத்தியதாக, பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட வழக்கில், போலீஸார்தான் ஜகேந்திர சிங்கை எரித்துக் கொன்றதாகச் சாட்சி சொன்ன பெண், தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டதாக பிறழ் சாட்சி அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜகேந்திர சிங். அப்பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா குறித்து எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு வந்தார். சுரங்க முறைகேடு, நில அபகரிப்பு உட்பட பல்வேறு சட்டவிரோத செயல்களில் அமைச்சர் ஈடுபட்டு வருவதாக ஜகேந்திர சிங் தனது செய்திகளின் மூலம் அம்பலப்படுத்தினார். இந்தச் செய்திகளை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றம் செய்து வந்தார்.

இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி இரவு ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக ஜகேந்திர சிங்கை அவரது வீட்டில் போலீஸார் கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஜகேந்திர சிங் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தார். அமைச்சருக்கு ஆதரவான போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை தீ வைத்து கொளுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

"போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராய் மற்றும் 5 போலீஸ்காரர்கள் என்னை உயிரோடு எரித்துக் கொளுத்தினர். இதற்குக் காரணமானவர் பால்வளத் துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா" என்று மருத்துவமனையில் மரண வாக்குமூலம் அளித்தார் ஜகேந்திர சிங்.

இதன் வீடியோ பிரதி, தி இந்து ஆங்கில நாளிதழுக்குக் கிடைத்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பலாத்கார வழக்கு:

அங்கன்வாடி ஊழியரான ஜகேந்திர சிங்கின் தோழி, அமைச்சருக்கு எதிராக தொடர்ந்து எழுதிவருவது குறித்து ஜகேந்திர சிங்கை எச்சரிக்கை செய்ய அவரின் வீட்டுக்கு வந்த போது, அவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்திருக்கிறார்.

இவர்தான் அமைச்சர் ராம்மூர்த்தி வர்மா மற்றும் அவரின் நண்பர்களால் கூட்டு பலாத்காரக்குள்ளாக்கப்பட்ட அங்கன்வாடி ஊழியர். இவருக்காக சமூக வலைதளத்தில் நீதி கேட்டுப் பதிவிட்ட போதுதான் ஜகேந்திர சிங் எரித்துக் கொல்லப்பட்டார்.

மே 5ம் தேதி அன்று அமைச்சர் ராம்மூர்த்தி வர்மா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராய், அமித் பிரதாப் பதாரியா, பிரம் குமார் தீட்சித் மற்றும் குஃப்ரான் ஆகியோர் தன்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலாத்காரப்படுத்தியதாக, ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில்அப்பெண் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் அறிக்கை:

ஜூன் 8ம் தேதியன்று ஜகேந்திர சிங் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அமைச்சர் ராம்மூர்த்தி வர்மாவுக்காக போலீஸார்தான் ஜகேந்திர சிங் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர் என்று தனியாளாக சாட்சி அளித்தார் ஜகேந்திர சிங்கின் தோழி. அவரின் வாக்குமூலமே ஜகேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டார் என்று வழக்கை முடிக்க எண்ணிய காவல்துறைக்கு எதிராக, நாடெங்கும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.

மாறுபட்ட இரண்டாம் அறிக்கை:

ஆனால் இப்போது ஜகேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டார் என்று பிறழ் சாட்சியளித்திருக்கிறார். அவரின் மாறுபட்ட அறிக்கைக்குப் பிறகு, காவல் துறை அவரின் இல்லத்துக்கு பாதுகாப்பு அளித்திருக்கிறது. மாநில அரசும், இது தற்கொலையே என்று கூறிவருகிறது.

இது குறித்து, ஜகேந்திர சிங்கின் மகன் ராகுல், "குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் மிரட்டல் காரணமாகவே அவர், தன்னுடைய அறிக்கையை மாற்றியிருக்கிறார்.

ஷாஜகான்பூர் மக்கள் அமைச்சரைக் கண்டாலே நடுங்குகின்றனர். அவருக்கு எதிராகப் பேசவோ, சாட்சி சொல்லவோ விருப்பம் இருந்தால் கூட, யாரும் முன்வருவதில்லை" என்றார்.

உள்ளூர் பத்திரிகையாளர்கள் தி இந்துவிடம், "வெகு சீக்கிரத்திலேயே அங்கன்வாடி ஊழியர், அமைச்சர் மற்றும் அவரின் சகாக்கள் மீது கொடுத்த கூட்டு பலாத்கார வழக்கைத் திரும்பப் பெற்றுவிடுவார். ஜகேந்திர சிங்தான் அமைச்சரின் மேல் பொய் வழக்கைத் தொடுக்கச் சொன்னதாகக் கூறுமாறு அவர் மிரட்டப்படலாம்.

அப்பெண்ணுக்கு இருந்த ஒரே தைரியமான நண்பர் ஜகேந்திர சிங். அமைச்சருக்கு எதிராக, வழக்கைத் தொடுக்க முக்கியக் காரணமாகவும், பக்க பலமாகவும் இருந்தவர் ஜகேந்திர சிங்தான்.

அவரும் இறந்த பிறகு, தன்னால் தனியாக எதுவும் செய்யமுடியாது என்று அப்பெண் நினைக்கிறார்" என்றனர்.

ஜகேந்திர சிங்கின் குடும்பத்தினர், அமைச்சர் வர்மாவுக்கு எதிராக எழுதியதால், ஜகேந்திர சிங் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று அமைச்சர்கள் மற்றூ காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x