Published : 23 Jun 2015 08:22 AM
Last Updated : 23 Jun 2015 08:22 AM
ஆந்திரா - தெலங்கானா முதல்வர்கள் மோதல் விவகாரத்தில் தலையிடும்படி அம்மாநில ஆளுநருக்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி அறிவுரை வழங்கி உள்ளார்.
தெலுங்கு தேசம் பிரதிநிதிக்கு ஆதரவாக ஓட்டளிக்க, ரூ.5 கோடி பணம் கொடுக்க முயன்ற விவகாரம் ஆந்திர மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
நியமன எம்எல்ஏ எல்விஸ் ஸ்டீபன்சனிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய தொலைபேசி உரையாடல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பணம் கொடுக்க முயன்றதாக தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது ஆந்திர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து விசாரிக்க டிஐஜி அந்தஸ்தில் உள்ள முகமது இக்பால் தலைமையிலான குழுவின் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மோதல் விவகாரம் குறித்து என்ன நிலை எடுப்பது என்பது குறித்து தெரியாமல் இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பை ஏற்றுள்ள இ.எஸ்.எல்.நரசிம்மன் தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரத்தில் தலையிடுவது குறித்து அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கியின் கருத்தையும் கேட்டிருந்தார். அதற்கு முகுல் ரோத்கி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
ஆந்திர மாநிலம் சீரமைப்பு சட்டம் பிரிவு 8-ன் கீழ், சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு. இரு மாநிலங்களின் பொது தலைநகராக ஹைதரா பாத் உள்ளதால் இருமாநில போலீஸாருக்கும் அங்கு அதிகார எல்லை உண்டு. இரு மாநில போலீஸாரையும் அழைத்து அறிக்கை அளிக்கும்படி கோர ஆளுநருக்கு உரிமை உண்டு.
எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு, போலீ ஸாரிடம் சட்டம் ஒழுங்கு மற்றும் வழக்கு விசாரணை குறித்த அறிக்கைகளை கேட்டுப் பெற வேண்டும். சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை ஆளுநர் நேரடியாக கண்காணிக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கி உள்ளார். இவ்வாறு முகுல் ரோத்கி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT