Published : 18 Jun 2015 08:48 AM
Last Updated : 18 Jun 2015 08:48 AM
வரும் செப்டம்பர்-அக்டோபரில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தாது என தெரியவந்துள்ளது. மாறாக பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த ஆட்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து `தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “சட்டப்பேரவை தேர்தல்களில் முதல்வர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தாமல் இருப்பது எங்கள் கட்சியின் அரசியல் சூத்திரங்களில் ஒன்று. இவ்வாறு நிறுத்தப்படுபவரின் சமூகத்தினர் தவிர மற்றவர்களின் வாக்குகளை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதே இதற்கு காரணம். ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல்களை போல் இல்லாமல் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம். ஆனால் இங்கு கிடைத்த தோல்வி கட்சியில் ஓர் உதாரணமாக உள்ளது” என்றனர்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பாஜக தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் முதலிடம் வகிப்பவர் சுஷில்குமார் மோடி. பிஹாரில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் உறவை முறித்துக்கொள்வதற்கு முன், இக்கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக தொடர்ந்து 2 முறை பதவி வகித்தவர் சுஷில்குமார் மோடி.
தொடக்கத்தில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர், பிறகு மோடியிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜகவின் முக்கிய தேசிய நிர்வாகிகள் பலரும் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் வேட்பாளருக்காக, பாஜக மாநிலத் தலைவர் மங்கள் பாண்டே, மாநில முன்னாள் அமைச்சர் பிரேம்குமார், மூத்த தலைவர்கள் நந்தகிஷோர் யாதவ், சத்யதியோ நாரயண் ஆர்யா ஆகியோரும் கடும் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் கிளம்பும் உட்கட்சி பூசலை சமாளிக்கும் வகையில், முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்துவதில்லை என பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், பிஹார் தேர்தலுக்கான பாஜக புதிய பொறுப்பாளரான மத்திய அமைச்சர் அனந்த குமார் பேசியுள்ளார்.
இப்பதவியில் அமர்த்தப்பட்ட பின் நேற்று முன்தினம் முதன்முறையாக பாட்னா வந்த அனந்த குமாரிடம், முதல்வர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், குறித்த நேரத்தில் அறிவிக்கப்படுவார் என பதிலளித்தார். “நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் காட்டு தர்பார் ஆட்சிகளுக்கு எதிராக பாஜக பிரச்சாரம் செய்யும்” என்றும் அவர் கூறினார்.
பிஹாரில் இம்முறை இருமுனைப் போட்டி நிலவ இருக்கிறது. இதில் பாஜக கூட்டணியை எதிர்க்கும் ஜனதா பரிவார் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இக்கூட்டணியில் மற்றொரு முக்கியத் தலைவரான லாலு, “முடிந்தால் பாஜக தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்கட்டும்” என தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT