Published : 26 Mar 2014 12:00 AM
Last Updated : 26 Mar 2014 12:00 AM
“ஆர்.எஸ்.எஸ். ஆதரவின்றி அணுவும் அசையாது” என்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னுடைய நேர்மை, திறமை, எளிமை, நடுநிலைமை ஆகிய பண்புகளால் பெரும்பாலானவர்களைக் கவர்ந்தவர் ஜஸ்வந்த் சிங். வாஜ்பாய் என்ற வசீகரத் தாமரையால் ஈர்க்கப்பட்ட ராஜஸ்தானிய வண்டு ஜஸ்வந்த். ஆம், வண்டேதான்! அத்வானி, மோடி போன்ற சுயமோகத் தலைவர்களுக்குக் குடைச்சலைக் கொடுப்பவர்.
பொதுநலனில் அக்கறை கொண்டு அரசியலுக்கு 1960-களின் பிற்பகுதியில் வந்த ராணுவ அதிகாரி ஜஸ்வந்த், ராஜஸ் தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் ஜஸோல் என்ற கிராமத்தில் ராஜபுத்திர குடும்பத்தில் 3.1.1938-ல் பிறந்தார். டெல்லி மேயோ கல்லூரியிலும் கடக்வாசலாவில் உள்ள தேசிய ராணுவப் பயிற்சிக் கல்லூரியிலும் (அகாடமி) பயின்றார்.
போலீஸ்காரராக இருந்து அரசியலுக்கு வந்த பைரோன் சிங் ஷெகாவத் தான் இவரை ஜனசங்கத்தில் சேர்த்து அரசியலுக்குக் கொண்டுவந்தவர்.
1980-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்துதான் கட்சி வட்டாரங்களில் ஜஸ்வந்தின் மதிப்பு உணரப்பட்டது. எந்த ஒரு பொறுப்பையும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் செய்யும் திறமைசாலி அவர் என்பதை வாஜ்பாய் வெகு விரைவில் கணித்துவிட்டார்.
வாஜ்பாய் தலைமையிலான அரசில், (1996 மே 16 முதல் ஜூன் 1 வரை) நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1998 டிசம்பர் 5 முதல் 2002 ஜூலை 1 வரை அப்பதவி வகித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் உச்சபட்சமாக இருந்த நேரத்தில் மிகத் திறமையாகவும் பதவிசாகவும் செயல்பட்டு பதற்றத்தைத் தணித்தார். அவருடைய நாசூக்கான பேச்சும் நடத்தையும் அமெரிக்கர்களை வெகுவாகக் கவர்ந்தன. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஸ்ட்ராப் தல்போட் இதை வெளிப்படையாகவே தெரிவித்தார்.
2002 ஜூலையில் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல் படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டார். பட்ஜெட்டை அவர் சமர்ப்பித்த விதமே வழக்கத்துக்கு மாறாக இருந்தது. அச்சிட்ட பட்ஜெட் உரையைக் கையில் வைத்து வாசிக்காமல், தான் கைப்பட எழுதித் தயாரித்ததையே வாசித்தார். சோம்நாத் சாட்டர்ஜியின் துணைவியாருடைய உடல் நலம் தொடர்பாகத் தான் அறிந்த தகவல்களின் அடிப்படையில், அவரைப் போன்ற நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் சலுகைகளை பட்ஜெட்டில் அறிவித்தபோது சோம்நாத் நெகிழ்ந்தார். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதை 2001-ல் பெற்றார்.
போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரம் நாடாளுமன்றத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட நிலையில், அந்த பீரங்கியின் சுடும் திறன் குறித்து நேரில் அறிய நியமிக்கப்பட்ட குழுவில் ஜஸ்வந்தும் இருந்தார். அரசியலுக்காகப் பேசாமல், பீரங்கியின் தரம் நன்றாக இருப்பதாகவே குறிப்பிட்டார். அப்புறம் ஏன் இந்த விமர்சனம் என்று கேட்டபோது, பிரச்சினை பீரங்கியின் சுடுதிறன் பற்றிய தல்ல, கமிஷன் பற்றியது என்று பதிலளித்தார். வாஜ்பாயைப் போலவே அரசியல் எதிரிகளைக்கூட வார்த்தையால் ‘சுடாத' ராணுவ வீரர் அவர்.
2004 முதல் 2009 வரையில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலை வராகப் பணியாற்றியிருக்கிறார். கட்சித் தலைமை கேட்டுக்கொண்டதால் கடந்த மக்களவை பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் தொகுதியில் கோர்க்கா முன்னணி ஆதரவுடன் போட்டி யிட்டு வென்றார். மேற்கு வங்க அரசியல் களத்தில் முதல்முறையாகத் தாமரை பூக்க உதவினார்.
பாகிஸ்தானின் தந்தை முகம்மது அலி ஜின்னாவைத் தன்னுடைய புத்தகத்தில் புகழ்ந்து எழுதியதற்காகக் கட்சியைவிட்டு விலக்கி வைக்கப்பட்டார். நிதின் கட்கரி கட்சித் தலைவரானபோது மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கட்சியில் அவருடைய செல்வாக்கு வளர் வதை ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மூத்த தலைவர் அத்வானி, இப்போது நரேந்திர மோடி ஆகியோர் விரும்பவில்லை என்று தெரிகிறது. பிரணாப் முகர்ஜியை பிரதமர் பதவிக்கான போட்டியாளராக ராஜீவ் காந்தி கருதி யதைப்போல, நரேந்திர மோடியும் அஞ்சுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வாஜ்பாய் பிரதமரானவுடன் நிதிய மைச்சராக ஜஸ்வந்த் சிங்கை அறி வித்தபோது பலருடைய புருவங்களும் நெரிந்தன. அந்த அரசு 13 நாள்களுக்குப் பிறகு கவிழ்ந்தது. பிறகு அடுத்த முறை ஆட்சியைப் பிடித்தபோது, ஜஸ்வந்த் சிங் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவரை இப்போது அமைச்சராக்க வேண்டாம் என்று கூறி தடுத்தார் அத்வானி.
ஆனால் வாஜ்பாயோ அவரை வெளி யுறவுத்துறை அமைச்சராக்கினார். பிறகு தெஹல்கா இணையளம் அம்பலப்படுத்திய பாதுகாப்பு பேர ஊழல் புகாரையடுத்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் வகித்து வந்த பாதுகாப்புத் துறையை ஜஸ்வந்த் சிங்கிடம் அளித்தார். பிறகு தன்னுடைய ஆட்சியின் கடைசிக் காலத்தில் நிதிப் பொறுப்பையும் ஜஸ்வந்த் சிங்கிடமே ஒப்படைத்தார்.
இப்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்க்கிறபடி 272 இடங்கள் கிடைக்காமல் போகுமானால் பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்க நேரும். அந்த கட்சிகள் பிரதமர் பதவியில் ஜஸ்வந்த் சிங்கை அமர்த்த வேண்டும் என கேட்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவரைப் போட்டியிலிருந்து விலக்கி வைக்கவே இந்த முயற்சி. அதற்காகவே, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சோனாராம் சௌத்ரியை பார்மர் வேட்பாளராக பாஜக தலைமை அவசர அவசரமாக அறிவித்திருக்கிறது. அதற்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் ஒத்துழைத்திருக்கிறார்.
“இப்போதுள்ள பாஜக அசல் அல்ல, நகல்” என்று மனம் வெதும்பிக் கூறியிருக்கிறார் ஜஸ்வந்த்.
“கட்சிக்காக பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றிய தனக்கு, தன்னுடைய கடைசி நாடாளுமன்ற வாய்ப்பான இத்தருணத்தில் பார்மர் தொகுதியை ஒதுக்கித் தரலாமே” என்று ஜஸ்வந்த் கேட்கிறாரே என்று நிருபர்கள் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டனர். அதற்கு அவர், “ஜஸ்வந்த் சிங்குக்கு உரிய இடத்தை, மரியாதையைத் தரு வோம்” என்றார். இதை ஜஸ்வந்த் சிங் விரும்பவில்லை. “நான் என்ன மனிதனா, இல்லை நாற்காலி, மேஜை போன்ற மரச்சாமானா, நினைத்த இடத்தில் நகர்த்தி வைப்பதற்கு?” என்று கோபமாகவே பதிலளித்துள்ளார்.
“ஆசியச் சக்ரவர்த்தியாக இருப்பவர் தனக்கு அடுத்த இடத்தில் யாரையும் வளரவிடக்கூடாது” என்றொரு அரசியல் முதுமொழி உண்டு. நரேந்திர மோடிக்கு அமித் ஷாக்களும் ராஜ்நாத் சிங்குகளும்தான் தேவை, ஜஸ்வந்த் சிங்குகள் தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT