Last Updated : 15 Jun, 2015 08:28 AM

 

Published : 15 Jun 2015 08:28 AM
Last Updated : 15 Jun 2015 08:28 AM

மியான்மரில் புகுந்து தீவிரவாதிகளை அழித்த இந்திய ராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேலிய தூதர் ஆதரவு

பயங்கரவாதிகளை அழிப்பதற்காக எல்லையை கடந்து செல்வது, பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய வகை போர் முறையில் ஒரு பகுதி ஆகும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் டேனியல் கார்மன் கூறினார்.

இந்திய ராணுவம் அண்மையில் மியான்மர் எல்லைக்குள் புகுந்து அங்கு முகாமிட்டிருந்த என்எஸ்சிஎன் (கப்லாங்) தீவிர வாதிகளை அழித்தது. இதை ஆதரிக்கும் வகையில் கார்மன் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து அவர் ‘தி இந்து (ஆங்கிலம்)’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “ஐ.நா. மனித உரிமை கவுன்சில் சொல்வது மட்டுமே சரியாக இருக்கும் என்று சர்வதேச சமூகம் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் எல்லைகள் மற்றும் மதிப்பீடுகளை பாதுகாக்கும் உரிமை உள்ளது என்பதை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும். ஏனென்றால் அதுவே எந்தவொரு அரசின் முழுமுதற் கடமை ஆகும்.

இந்தியாவும் இஸ்ரேலும் சமச்சீரற்ற போர் முறை என்ற ஒரே வகை அச்சுறுத்தலை கொண்டுள்ளன. இந்த வகை அச்சுறுத்தலை கொண்டுள்ள சில நாடுகளில் நாமும் உள்ளோம். நமது எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீர்கள், இந்த வகை பயங்கரவாதத்தால் தாக்கப்படுகின்றனர்.

எனவே இது நம்மிரு நாடுகளும் கூட்டாக எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல் ஆகும்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 6 மாதங்களில் இஸ்ரேல் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சென்றால் இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கும். பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயண தேதியை முடிவு செய்வதற்காக, இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் அளவிலான சந்திப்பு ஜெருசலேம் நகரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

இதையடுத்து பிரதமரின் பயண ஏற்பாடுகளை செய்வதற்காக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இஸ்ரேல் செல்கிறார்.

இதுகுறித்து கார்மன் கூறும்போது, “இந்தியா இஸ்ரேல் இடையே, பயங்கரவாத செயல்களுக்கு எதிரான ஒத்துழைப்பே பிரதமர் மோடியின் பயணத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். இஸ்ரேலுடன் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2014, பிப்ரவரியில் உள்நாட்டு பாதுகாப்பு உடன்பாடு செய்துகொண்டது. இந்த உடன்பாடு இம்முறை மேம்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும், என்றென்றும் நினைவில் இருக்கும் வகை யிலும் அமையும். இரு நாடுகள் இடையிலான உறவில் மாற்றத் துக்கு சமிக்ஞையாக இருக்கும்.

ஐ.நா.வில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல் பட்டாலும் இதை மட்டுமே வைத்து இந்திய இஸ்ரேல் உறவை பார்க்கக் கூடாது. பிற மாற்றங் களையும் கவனிக்க வேண்டும்.

பல்வேறு பிரச்சினைகளில் நடத்தப்பட்ட பேச்சுவார்தைகள், தூதரக சந்திப் புகள், இரு நாடுகளிடையே பயணத் துக்காக திட்டமிடல்கள், கையெழுத் தாகியுள்ள உடன் பாடுகள் ஆகிய வற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பாலஸ்தீன கொள்கை, இந்தியா இஸ்ரேல் உறவில் குறுக்கீடாக இருக்காது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x