Published : 19 Jun 2015 02:23 PM
Last Updated : 19 Jun 2015 02:23 PM
மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், ராஜ்யசபாவில் போதிய எம்.பி.க்கள் இல்லாததால் நில மசோதா போன்ற பல கனவுத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் பாஜகவுக்கு பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவது ராஜ்யசபாவில் தனது பலத்தை பெருக்கிக் கொள்ள மிகப்பெரிய ஆயுதமாகும்.
இந்நிலையில், பிஹார் தேர்தலை முன்னிட்டு முஸ்லிம்களுடன் பிரதமர் மோடி அதிக இணக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஜூன் மாதம் தொடங்கியதுமே அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். ஜூன் தொடக்கத்தில் வங்கதேசம் பயணம் மேற்கொண்டார் மோடி. வங்கதேசம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு நாடாகும். அந்தப் பயணத்தை முடித்த கையோடு இந்தியா திரும்பிய மோடி முஸ்லிம் பிரதிநிதிகள் 30 பேர் கொண்ட குழுவினரைச் சந்தித்தார்.
முஸ்லிம் நாடுகளின் தூதர்களைச் சந்தித்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நேற்று (வியாழக்கிழமை) முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார், அதுவும் உருது மொழியில் ட்வீட் செய்திருந்தார். பகவத் கீதை தொடர்பான போட்டியில் வெற்றி பெற்ற 12 வயது முஸ்லிம் சிறுமியைச் சந்தித்தார். இவை அத்தனையும் வெறும் 18 நாட்களில் நடந்திருக்கின்றன.
இந்தப் புள்ளிகளை எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இணைத்தால் முஸ்லிம்களுடன் ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்தவே மோடி இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்பது புலப்படுவதாக கூறுப்படுகிறது.
பிஹார் தேர்தலை மட்டுமல்ல அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள் அசாம், மேற்குவங்கம், கேரள சட்டப்பேரவை தேர்தல்களையும் எதிர்நோக்கியே பிரதமர் தனது செயல்பாடுகளை திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள்.
ஏனெனில் மேற்கூறிய 4 மாநிலங்களிலும் முஸ்லிம் வாக்குவங்கி கணிசமாக இருக்கிறது. பிஹாரில் முஸ்லிம் மக்கள்தொகை (16.5%), மேற்குவங்கம் (25.2%), கேரளம் (24.7%), அசாம் (30.9%) ஆகும்.
பிஹார் மட்டுமல்லாது மற்ற மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ராஜ்யசபாவில் அதன் பலம் அதிகரிக்கும்.
ஆர்.எஸ்.எஸ். வெளியிடவுள்ள 'யோகாவும் இஸ்லாமும்' என்ற நூல் தொடர்பாக அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள் யாரும் பாஜகவுக்கு நெருக்கமானவர்களோ அல்லது முஸ்லிம் ராஷ்டிரீய அமைப்பைச் சேர்ந்தவர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் முஸ்லிம் பிரதிநிதிகளா?
இந்நிலையில், மோடியை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள் உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிகள்தானா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். காரணம் பிரதானமான எந்த ஒரு முஸ்லிம் இயக்கத்தின் தலைவரும் பிரதமருடனான சந்திப்பில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், சச்சார் குழுவின் முன்னாள் அதிகாரி சையது ஜாஃபர் மஹ்மூத் கூறும்போது, "எந்தவித நடவடிக்கையுமே இல்லாமல் இருப்பதற்கு சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதே பாராட்டுக்குரியது" எனக் கூறியிருக்கிறார்.
அதேவேளையில் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு அரசியல் நோக்கர் கூறும்போது, "முஸ்லிம்களுடனான இணக்கம் திடீரென அதிகரித்திருப்பது பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவே என அப்பட்டமாகத் தெரிகிறது. பிஹாரில் முஸ்லிம் அமைப்புகளுடன் பாஜக தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
எப்படி மக்களவை தேர்தலுக்கு முன்னர் உ.பி.யில் ஒரு வியூகம் வகுத்து செயல்பட்டதோ, அதேபோல் தற்போது பிஹாரில் பாஜக செயல்படத் தொடங்கியுள்ளது. உ.பி.யில் அமைதிக் கட்சி திடீரென பாஜகவுடன் கூட்டு சேர்ந்து வாக்குகளை வெகுவாகப் பிரித்தது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT