Published : 06 Jun 2015 06:11 PM
Last Updated : 06 Jun 2015 06:11 PM
ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் காங்கிரஸ் தலைவர்கள் காட்டும் ஆர்வம் திடீர் என அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை எதிர்க்க ஒரு வலுவான ஆயுதம் என அவர்கள் கருதுவது காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
பொதுமக்களிடம் தங்கள் கருத்தை உடனடியாகவும், எளிதாகவும் கொண்டு போய் சேர்க்க மிகவும் உதவியாக இருப்பது சமூக இணையதளங்கள். இதனால், தேசிய அரசியல் தலைவர்கள் இடையே பிரபலமாகி வரும் இவற்றை பயன்படுத்துவதில் காங்கிரஸ் தலைவர்களின் ஆர்வமும் பெருகி வருவதாகக் கருதப்படுகிறது. காங்கிரஸிற்கு கட்சிக்கு முன்பாக சமூக இணையதளங்கள் பயன்படுத்துவதில் முந்தி விட்ட பாரதிய ஜனதாவை எதிர்க்க ட்விட்டரில் கணக்கு துவக்கும் காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது
இதற்குமுன் மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த மணிஷ் திவாரி, அஜய் மக்கன் மற்றும் ஷக்கீல் அகமது ஆகிய மூன்று தலைவர்களிடம் மட்டுமே ட்வீட்டர் கணக்கு இருந்தது. இதில், ஷக்கீல் அகமது தன் கணக்கை துவக்கியதில் இருந்து பெரிய அளவில் பயன்படுத்துவதில்லை. ஆனால், தம் ஆட்சியை இழந்த பின் அதன் முக்கியத்துவத்தை காங்கிரஸ் தலைவர்கள் உணரத் துவங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதில், குறிப்பாக காங்கிரஸ் துணை தலைவரான ராகுல் காந்தி தம் அலுவலகம் மூலமாக கடந்த மே முதல் வாரத்தில் ட்விட்டரில் இணைந்தார். இவரது சுற்றுப் பயணங்கள், கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்கள் போன்ற தகவல்கள் அனைத்தும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகின்றன. ராகுலின் ட்விட்டரை 90,800
பேர் தொடர்கின்றனர். ராகுலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி 2011-ல் ட்விட்டரில் இணைந்த திக்விஜய் சிங்கை 16,700 பேர் தொடர்கின்றனர். இந்த பட்டியலில் கடந்த மே 24–ல் இணைந்த முன்னாள் நிதி அமைச்சரான ப.சிதம்பரத்தை ட்விட்டரில் தொடருவோர் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டி விட்டது. எனினும், இன்னும் கூட காங்கிரஸின் பல முக்கியத் தலைவர்கள் சமூக இணையதளங்களுடன் எந்த தொடர்பும் இன்றி இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய வட்டாரம் கூறுகையில், ‘முதன் முதலாக மார்ச் 2009-ல் ட்விட்டரில் இணைந்த அரசியல் தலைவர் எங்கள் கட்சியின் சசிதரூர். இவர் பொருளாதார வகுப்பில் விமானப்பயணம் செய்வது குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்திருந்தார். இந்த பிரச்சனை மக்களவையில் எழுப்பிய பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு, கடுமையாக எதிர்த்ததுடன் அவர் ட்விட்டரில் கருத்து பதிவு செய்வது குறித்தும் கிண்டலடித்தார். அப்போது முதல் ட்விட்டரில் இணைந்தால் சர்ச்சையில் சிக்கி விடுவோம் எனப் பயந்து காங்கிரஸ் தலைவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால், ராகுலின் இணைதலுக்கு பிறகு அந்த தயக்கம் லேசாக விலகத் துவங்கி உள்ளது.’ எனத் தெரிவித்தனர்.
ஊழல் எதிர்ப்பிற்கு எதிராக அன்னா அசாரே நடத்திய போராட்டத்தின் போது தான் முதன் முறையாக சமூக இணையதளங்களின் பயன்பாடு பொதுமக்கள் இடையே அதிகரிக்கத் துவங்கியது. இதன் பலனை உடனடியாகப் புரிந்து கொண்ட பாஜக முதல் கட்சியாக சமூக இணையதளங்களில் இணைந்தது. இதை தொடர்ந்த ஆம் ஆத்மி கட்சிக்கு அது, டெல்லியில் ஆட்சியை பிடிக்கவும் முக்கிய கருவியாக இருந்தது. இதுபோலவே, பாஜகவும் மக்களவை தேர்தலில் தன் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தியது. இத்துடன், ஏற்கனவே ட்விட்டரில் இணைந்திருந்த நரேந்தர மோடி தான் பிரதமரானதும் தம் அமைச்சரவையின் உறுப்பினர்கள் அனைவரும் ட்விட்டரில் இணையுமாறு உத்தரவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியினரும் வேறு வழியின்றி சமூக இணையதளங்களில்
இணைவதில் ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளனர். இதில், மேலும் பல அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் இன்னும் கூட எதிலும் இணையாமல் இருப்பது நினைவு கூறத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT