Last Updated : 26 Mar, 2014 11:58 AM

 

Published : 26 Mar 2014 11:58 AM
Last Updated : 26 Mar 2014 11:58 AM

பிஹாரில் ராப்ரி தேவியை எதிர்த்து தம்பி சாது யாதவ் போட்டியிட முடிவு: ராப்ரி வெற்றி பெறுவதில் சிக்கல்

பிஹாரின் சரண் மக்களவை தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு வின் மனைவி ராப்ரி தேவியை எதிர்த்து அவரது தம்பி சாது யாதவ் போட்டியிட முடிவு செய்துள்ளதால், ராப்ரி வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சாது யாதவ் “தி இந்து”விடம் கூறுகையில், “அரசியலில் உறவுகள் கிடையாது. எனது சகோதரி போட்டியிடும் சரண் தொகுதிவாசிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் அங்கு சுயேச்சையாக போட்டியிடுகிறேன். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மிகவும் சிறந்தவர் என்பது தனி விஷயம். ஆனால், நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்” என்றார்.

2009-ல் இத்தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா வேட்பாளருமான ராஜீவ் பிரதாப் ரூடியை வென்றார் லாலு. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், இங்கு தனது மனைவியை நிறுத்தினார் லாலு. இந்தத் தேர்தலில் பாஜகவின் ரூடி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்கிறார் ராப்ரி தேவி. இந்நிலையில் ராப்ரிக்கு எதிராக அவரது தம்பி களம் புகுவதால் ராப்ரி வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

பிஹாரில் லாலு ஆட்சியின்போது அவரது மைத்துனர்கள் சாது யாதவ், சுபாஷ் யாதவ் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்தனர். இதில் சாதுவை சட்டமன்றத்துக்கும், சுபாஷை சட்டமேலவைக்கும் உறுப்பினர் ஆக்கி னார் லாலு. பின்னர் ராப்ரியின் ஆட்சியில் இவர்களின் அரசியல் தலையீடு அதிகரித் ததால் கட்சிக்கு களங்கம் உருவானது.

பிறகு சுபாஷை மாநிலங்களவைக்கும் சாதுவை மக்களவைக்கும் 2004-ல் அனுப்பினார் லாலு. 2009-ல் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் சாது, காங்கிரஸில் இணைந்து போட்டியிட்டு தோற்றார். 2010-ல் நடந்த பிஹார் சட்டமன்ற தேர்தலிலும் சாதுவுக்கு தோல்வியே கிடைத்தது.

இதனிடையே நரேந்திர மோடியை குஜராத்தில் சந்தித்து வாழ்த்து கூறி னார் சாது. ஆனால், இவரது கிரிமினல் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து வரும் பிஹார் பாஜகவினரின் எதிர்ப்பால் சாதுவை கட்சியில் சேர்க்க முடியாமல் போனது.

இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சாது. ராப்ரியின் மற்றொரு சகோதர் சுபாஷ், எந்தக் கட்சியிலும் சேராமல் அமைதியாக இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x