Last Updated : 13 Jun, 2015 11:58 AM

 

Published : 13 Jun 2015 11:58 AM
Last Updated : 13 Jun 2015 11:58 AM

ஒரே சமயத்தில் இரண்டு கல்வி நிலையங்களில் பட்டப்படிப்பா?- புதிய சிக்கலில் தோமர்

போலி கல்வி சான்றிதழ் புகாரால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர், ஒரு சமயத்தில் டெல்லி மற்றும் அவத் பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு பயின்றதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் உதவியால் வெளியான தகவலால், அவருக்கு புதிய சிக்கல் உருவாகும் எனக் கருதப்படுகிறது.

டெல்லியின் திரி தொகுதியில் தோமரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற பாரதிய ஜனதாவின் வேட்பாளர் நந்த் கிஷோர் கர்க், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தோமர் மீது சில தகவல்களை பெற்றுள்ளார். அதன்படி அவர், உபியின் பைஸாபாத்தில் உள்ள டாக்டர்.ராம் மனோகர் லோகியா அவத் பல்கலைகழகத்தில் பி.எஸ்.சி பயின்ற அதே சமயத்தில் டெல்லி பல்கலைழகத்தின் கீழ் இயங்கும் ராஜ்தானி கல்லூரியில் 1985 முதல் 1988 ஆம் ஆண்டு வரை பி.ஏ பயின்றதாகவும், ஆனால் அதன் சில பாடங்களில் தோமர் தேர்ச்சி பெறவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை தம் சட்டக்கல்வி சான்றிதழை டெல்லி பார் கவுன்சிலில் பதிவு செய்த போது குறிப்பிடவில்லை. அதில், தாம் அவத் பல்கலைகழகத்தில் பி.எஸ்.சி பெற்றதை மட்டும் தெரிவித்துள்ளார்.

இதனால், தோமர் மீது டெல்லி போலீஸார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யும் பொருட்டும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தம்மிடம் விசாரணை நடத்திய டெல்லி போலீஸாரிடம் தோமரின் அலுவலர்கள், அவர் ராஜ்தானி கல்லூரியின் பட்டப்படிப்பில் இணைந்த அதே ஆண்டில் விலகி கொண்டதாகக் கூறியுள்ளனர்.

எனினும், 1988 ஆம் ஆண்டு வரை தோமர் தம் கல்லூரியில் கல்வி பயின்றதாக டெல்லி போலீஸாரிடம் கூறியுள்ள ராஜ்தானி கல்லூரி, அதை முடிக்காத காரணம் பற்றிக் கூறவில்லை. எனவே, இந்த பிரச்சினையில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தோமருக்கு மேலும் சிக்கலை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

போலி சான்றிதழ் பெற்றதாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழக்கை சந்தித்து வரும் அம் மாநில சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்தர்சிங் கடந்த செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசடி, ஏமாற்றுதல் மற்றும் சதி ஆகிய வழக்குகளை பதிவு செய்த டெல்லி போலீஸார் ஐந்து நாள் காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர். தம் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த கைதை மத்திய அரசு செய்திருப்பதாக புகார் கூறி வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது, தோமரை கட்சியில் இருந்து கழட்டி விடவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x