Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

பிரச்சாரத்தில் மோடியை முன்னிலைப்படுத்த வேண்டாம்: தொண்டர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறிவுரை

தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்த வேண்டாம். தேசத்தின் முன்பு உள்ள பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்திப் பேச வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டுக் கூட்டம், பெங்களூரில் கடந்த ஞாயிற் றுக்கிழமை முடிவடைந்தது. இதில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், “நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தத் தேவையில்லை. நாம் அரசியல் கட்சியில்லை. நமக்கென சில வரைமுறைகள் உள்ளன. அதன்படி செயல்பட வேண்டும்” என்றார்.

மோடியை முன்னிலைப்படுத்தத் தேவையில்லை என்ற ரீதியில் மோகன் பாகவத் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில், மோகன் பாகவத்தின் பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்து ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ் கூறும்போது, “கடந்த 10 ஆண்டு கால மோசமான ஆட்சியால் நாடு மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. சமூக அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., இதை முன்வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் மோகன் பாகவத் அவ்வாறு பேசியிருக்கிறார்.

மத்தியில் உள்ள மோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாடுபட வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பொறுத்தவரை நாட்டில் நிலவும் பிரச்சினைதான் முக்கியம். தனி நபர்கள் அல்ல. மக்களை சந்தித்து மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியம் குறித்து தொண்டர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அரசியல் கட்சியான பாஜகவுக்கு மோடியை முன்னிலைப்படுத்துவது அவசியமாக இருக்கலாம். ஆனால், சமூக அமைப்பான எங்களுக்கு அது தேவையில்லை. எங்களுக்கு நாட்டின் பிரச்சினைகள்தான் முக்கியம். இந்த அடிப்படையில்தான் மோகன் பாகவத் அவ்வாறு கூறினார்.

அதே சமயம், இவ்வாறு நாங்கள் கூறுவதன் மூலம் மோடியை முன்னிலைப் படுத்தும் பாஜகவை நாங்கள் விமர்சிப்பதாக நீங்கள் கருதிவிடக் கூடாது” என்றார்.

பின்னர் தனது ட்விட்டர் இணையதளத்தில் ராம் மாதவ் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு மோகன் பாகவத் அளித்த அறிவுரை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. சமூக அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., மக்களின் பிரச்சினைகளை பற்றி மட்டுமே பேசும் என்றுதான் அவர் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x