Last Updated : 01 Jun, 2015 08:30 AM

 

Published : 01 Jun 2015 08:30 AM
Last Updated : 01 Jun 2015 08:30 AM

நிலம் கையகப்படுத்தும் மசோதா மீது கருத்து கேட்பு: நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு

நிலம் கையகப்படுத்தும் மசோதா மீது நாட்டின் அனைத்து மாநிலங்களின் கருத்துகளை கேட்க நாடாளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், நிலம் கையகப்படுத்தும் மசோதா மிகுந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இதையடுத்து இந்த மசோதாவை இரு அவைகளின் உறுப்பினர்களை கொண்ட கூட்டுக்குழு பரிசீலிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

பாஜக எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையில் 30 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழு கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் முதல் முறையாக கூடியது. இது குறித்து ‘தி இந்து’விடம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் உறுப்பினர்கள் கூறும்போது, “இந்த மசோதாவின் ஷரத்துகளை தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் அதன் மீது பெரும் பாலானவர்கள் பொதுப் படையாகவும், மேலோட்டமாகவும் பேசி வருகிறார்கள் என்பது மத்திய அரசின் கருத்து.

இதனால், இந்த மசோதா மீது கருத்துகளை அனுப்பும் படி, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட விவசாய சங்கங் களுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்” என்றனர்.

‘தி இந்து’வுக்கு கிடைத்த தகவலின்படி இந்தக் கூட்டத்தில், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013-ல் உள்ள குறைகளை மத்திய நிலஆதாரங்கள் துறை செயலாளர் வந்தனா குமாரி, உறுப்பினர்களிடம் பட்டியலிட்டுள்ளார். மேலும் அதில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் மற்றும் இடதுசாரி உறுப்பினர் களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இக் கூட்டத்தில், மசோதாவில் செய்யப் பட்டுள்ள மாற்றங்களின் அடிப் படைத்தன்மை மீது பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.

நிலம் கையகப்படுத்துவதால் அந்தக் குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவது முந்தைய சட்டத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதற்கு அளிக்கப்பட்ட பதிலில் திருப்தி அடையாத அவர்கள், சம்பந்தப்பட்ட அனைத்து துறை களின் அமைச்சர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். சில உறுப்பினர்கள் தொழில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பினர். இவை அனைத்தின் மீது விரிவாக ஆலோசனை செய்தபின் தங்கள் பரிந்துரைகளை அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன் அரசிடம் சமர்ப்பிக்க கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 29-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற் கிடையில் உள்ள 8 வாரங்களிலும் இக்குழு கூடி தனது பரிந்துரைகளை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மசோதா மீது பொதுமக்களின் ஆலோசனைகளை பெறும் வகையில் பத்திரிகைகளிலும் விளம்பரம் வெளியிட இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த விளம்பரங்கள் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x