Last Updated : 14 Jun, 2015 11:50 AM

 

Published : 14 Jun 2015 11:50 AM
Last Updated : 14 Jun 2015 11:50 AM

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 12 பேரின் சான்றிதழ்கள் போலி: டெல்லி போலீஸாரிடம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ புகார்

போலி சான்றிதழ் புகாரில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மேலும் 12 எம்எல்ஏக்கள் மீது இப்புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜேஷ் கர்க், டெல்லி பிரசாந்த் விஹார் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், “ஆம் ஆத்மி கட்சியின் 12 எம்எல்ஏக்களின் கல்விச் சான்றிதழ் பொய்யானது. இதன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் கரோல்பாக் எம்எல்ஏ விஷேஷ் ரவி, 2013-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில் சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் 2008-ம் ஆண்டு பி.காம். பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். பிறகு இவர் 2015-ல் போட்டியிட்டபோது, இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பயின்று வருவதாக தெரிவித் துள்ளார். இதில் 2013-ம் ஆண்டு பிரமாண பத்திரத்தில் ரவி பி.காம். முடித்ததாக அளித்த தகவல் பொய்யானது என்று ராஜேஷ் கர்க் கூறியுள்ளார்.

கர்க் தனது புகாரில் “ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவான முன்னாள் ராணுவ வீரர் சுரேந்தர் சிங்கின் சான்றிதழும் போலியானது. இத்துடன் கடந்த 2013 மற்றும் 2015-ல் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து ஆம் ஆத்மி வேட்பாளர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்கள் குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜேஷ் கர்க், டெல்லி பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் நிர்வாகியாக இருந்தார். பிறகு காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே போராட்டத்தில் கலந்துகொண்ட ராஜேஷ் கர்க், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அறிமுகமாகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

இக்கட்சி சார்பில் கடந்த 2013-ல் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ரோஹிணி தொகுதி யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு 2015-ல் மீண்டும் போட்டி யிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருடன் கேஜ்ரிவால் தொலை பேசியில் நடத்திய உரையாடல் வெளியானதை தொடர்ந்து கட்சி யில் இருந்து கர்க் நீக்கப்பட்டார்.

டெல்லி ராணுவக் குடியிருப்பு தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவ வீரர் சுரேந்தர் சிங் மீது ஏற்கெனவே ஜூன் 1-ம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற பாஜக வேட்பாளர் கரண்சிங் தன்வார் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில், “சுரேந்தர் 2012-ல் சிக்கிம் பல்கலைக்கழகத்தில் பயின்றதாக கூறியுள்ள கல்விச் சான்றிதழ் மீது விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரியுள்ளார். இதற்கு ஆதாரமாக சுரேந்தர் மீது சிக்கிம் பல்கலைக்கழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் முகேஷ் சர்மா பெற்ற தகவலை அளித்துள்ளார்.

இதில், சுரேந்தர் சிங் பட்டம் பெற்றதாகக் கூறியுள்ள வருடத்தில் அந்தப் பெயரில் யாருமே கல்வி பயிலவில்லை என சிக்கிம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தப் புகார் மீது விசாரணை செய்வதற்காக டெல்லி போலீஸார் ஒரு குழுவை சிக்கிம் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் மேலும் பல எம்எல்ஏக்கள் போலி சான்றிதழ் விவகாரத்தில் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x