Published : 18 May 2014 12:00 PM
Last Updated : 18 May 2014 12:00 PM
தேசிய கட்சிகளுக்கு மாறாக இனி தமிழகத்தைப் போன்று, ஆந்திரா, தெலங்கானாவிலும் மாநில கட்சிகளின் ஆட்சிதான் நீடிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் பெரிய மாநிலமாக விளங்கிய ஆந்திரம், வரும் ஜூன் 2-ம் தேதி தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களாக அதிகாரப்பூர்வமாக உருவாக உள்ளது. இங்கு நடத்து முடிந்துள்ள சட்டமன்ற, மக்களவை தேர்தல் முடிவுகள், தேசிய கட்சியான காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சீமாத்திராவில், ஒரு எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.வைக்கூட காங்கிரஸ் பெறவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து, வேறு கட்சிகளுக்கு மாறியவர்களும் தோல்வியையே சந்தித்துள்ளனர்.
தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்த பா.ஜ.க. சீமாந்திராவில் 4 சட்டமன்றம், 2 மக்களவை தொகுதிகளைக் கைப்பற்றியது. தேர்தலுக்கு முன்னர், சீமாந்திராவில் பா.ஜ.க. விற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. தெலங்கானாவிற்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்ட போதிலும், அங்கும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
“தெலங்கானா மாநிலம் வழங்கியது நாங்கள்தான்” என காங்கிரஸார் தீவிர பிரச்சாரம் செய்தும், தெலங்கானாவில் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கு தெலங்கானா ராஷ்டிரீய சமிதி ஆட்சியை கைப்பற்றினாலும், அதற்கு அடுத்தப்படியாக தெலுங்கு தேசம் அனைத்து தொகுதிகளிலும் பலம் வாய்ந்த கட்சியாகவே உள்ளது.
ஆகவே, இனி வரும் காலங்களில், தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் தமிழகத்தைப் போல மாநில கட்சிகளுக்குத்தான் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என அரசியல் நோக்கர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் வழங்கியது நாங்கள்தான் என காங்கிரஸார் தீவிர பிரச்சாரம் செய்தும், தெலங்கானாவில் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT