Last Updated : 21 Jun, 2015 09:27 AM

 

Published : 21 Jun 2015 09:27 AM
Last Updated : 21 Jun 2015 09:27 AM

வாக்காளர்கள் குழப்பமடைவதைத் தவிர்க்க வாக்குப் பதிவு இயந்திரங்களில் இனி வேட்பாளர்களின் புகைப்படம்: முதல் முறையாக 27-ம் தேதி இடைத்தேர்தலில் அமலாகிறது

தேர்தலின்போது வாக்காளர்கள் குழப்பமடைவதைத் தவிர்க்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படமும் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கே.என்.பர் நேற்று கூறியதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றுக்கு நடுவில் அவர்களின் புகைப்படமும் இடம்பெறும். இந்த புதிய நடைமுறை இப்போதிலிருந்து அமலுக்கு வருகிறது. இனி நடைபெற உள்ள அனைத்து சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும்.

தேர்தலின்போது வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரை எளிதாக அடையாளம் கண்டு, எவ்வித குழப்பமுமின்றி வாக்களிக்க இந்த புதிய முறை உதவும். ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிடும்போதும், வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்போதும் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க இந்த முறை உதவும். மேலும் வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும்.

இந்த புதிய நடைமுறை நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தின் ஆர்கே நகர் தொகுதி உட்பட வரும் 27-ம் தேதி 5 மாநிலங்களில் நடைபெற உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த புதிய நடைமுறையை கட்டாயமாக அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெறும் வேட்பாளர்களின் புகைப்படங்கள் சீருடை அணிந்தபடி இருக்கக்கூடாது என்றும் மூக்குக் கண்ணாடி, தொப்பி அணிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அசோக் கெலாட் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திரிபுரா மாநில முன்னாள் இணை தலைமை தேர்தல் அதிகாரி ஹிரன்மோய் சக்கரவர்த்தி கூறும்போது, “வாக்காளர்களை குழப்புவதற்காக சில அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் பெயரைக் கொண்டவர்களை டம்மி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வைப்பதுண்டு. இதனால் சில நேரங்களில் பிரபல கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு இந்த புதிய முறை தீர்வாக இருக்கும். குறிப்பாக படிப்பறிவில்லாதவர்கள் குழப்பமின்றி வாக்களிக்க இந்த முறை உதவும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x