Published : 04 Jun 2015 09:03 AM
Last Updated : 04 Jun 2015 09:03 AM
பிஹாரில் ஜனதா பரிவாரில் ஏற்பட்டு வரும் சிக்கலால், புதிய கூட்டணிகள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முந்தைய ஜனதா கட்சியி லிருந்து உருவான 6 கட்சிகள் (ஜனதா பரிவார்) ஒன்றிணைவதில் இறுதி வடிவம் அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை அதன் தலைவர் முலாயம்சிங் யாதவ் தலைமையில் நடந்து வருகிறது.
குறிப்பாக, சில மாதங்களில் வரவிருக்கும் பிஹார் சட்டப் பேரவை தேர்தலில் முதல்வர் வேட் பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாரும், முதல்வரை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கலாம் என லாலுவும் கூறியதால் சிக்கல் பெரிதாகி வருகிறது. மேலும், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியை ஜனதா பரிவாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற லாலுவின் கோரிக்கையிலும் நிதிஷுக்கு விருப்பம் இல்லை. இதனால் ஜனதா பரிவாரில் ஒத்துப்போக முடியவில்லை எனில், காங்கிரஸுடன் நிதிஷும், மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவுடன் லாலுவும் தனித்தனியே கூட்டு சேர்ந்து போட்டியிடத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலுவால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில், நிதிஷ் குமார்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என தொடக்கம் முதலே கருதப்பட்டு வந்தது. இதை லாலு திடீர் என ஏற்க மறுப்பதுடன் தனது கட்சியினருக்காக அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கிறார். எனவே, ஜனதா பரிவாரில் ஒன்றிணைவதை விட காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் எங்களுக்கு பலவகையில் லாபம்” என்றது.
பிஹாரில் தொடக்கம் முதலே லாலுவுக்கு எதிராக நிதிஷ் அரசியல் செய்ததால் அவருக்கு யாதவர் சமூகத்தினர் வாக்களிக்கத் தயங்குவார்கள் என்பது லாலுவின் கணிப்பாக உள்ளது. பிஹாரில் 15 சதவீதத்துக்கும் மேல் யாதவர்கள் உள்ளதால், தேர்தலுக்குப் பின் தனது கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைத்தால் தனது கட்சியினரை முதல்வர் பதவியில் அமர்த்தலாம் என்பதும் லாலுவின் திட்டமாக உள்ளது. இத்துடன் தலித் வாக்கு களுக்காக மாஞ்சியுடன் கூட்டணி சேர்வது தனக்கு லாபமாக அமை யும் எனவும் லாலு கருதுகிறார்.
ஜனதா பரிவார் ஒன்றிணைந் தால் அதன் கட்சிகள் தங்கள் சின்னம் மற்றும் அங்கீகாரத்தை இழக்க வேண்டி இருக்கும் என ஒரு பேச்சு எழுந்தது. இதை யடுத்து, சமாஜ்வாதியின் பொதுச் செயலாளரும் முலாயம்சிங்கின் சகோதரருமான ராம் கோபால் யாதவ், “பிரிந்த ஜனதா கட்சி கள் ஒன்றிணைவதை விட, பிஹார் தேர்தலில் லாலுவும் நிதிஷ்குமாரும் இணைந்து போட்டியிட்டால் நல்லது” என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள துணைத் தலைவர் ரகுவன்ஷ் பிரசாத், பிஹார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை விட தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதனால், 6 கட்சிகள் ஒன்றிணைவது சாத்திய மல்ல என நிதிஷும், லாலுவும் ஒரு வரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும் நிலை உருவாகி வருகிறது. இதில் மாஞ்சி, ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT