Published : 13 Mar 2014 09:30 AM
Last Updated : 13 Mar 2014 09:30 AM
வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சி மாறத் தயாராகி விட்டனர்.
இதில், பிஹார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சிலர் வேறு கட்சிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் ஜார்கண்டின் முக்கிய தலைவரான சுபோத்காந்த் சஹாய் எம்பி போன்ற சிலரது பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. இதற்கு டெல்லி தலைமையிடம் முன்னாள் மத்திய அமைச்சரான சுபோத் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இவரைப்போல், ஜார்கண்டில் அதிருப்தி அடைந்த ராஜ்யசபையின் காங்கிரஸ் எம்பியான ஸ்டீபன் மராண்டி மற்றும் மற்றொரு காங்கிரஸ் தலைவர் மனோஜ் யாதவ் ஆகியோர் பாரதிய ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்ப டுகிறது.
பிஹாரில் பாடலிபுத்ராவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார் அம் மாநில மூத்த தலைவரான லலித் மோஹன்சிங். ஆனால், இந்த தொகுதியை கூட்டணிக் கட்சி தலைவரான லாலு தன் மகளான மிசா பாரதிக்கு ஒதுக்கி கொண்டார். எனவே, அதே பாடலிபுத்ராவில் போட்டியிட வேண்டி லலித், திரிணாமுல் காங்கிரசுடன் ரகசிய பேச்சு நடத்தி வருவதாகக் கருதப்படுகிறது.
இம் மாநிலத்தின் இன்னொரு தலைவரான மெஹபூப் அலி கெய்சரும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல், மம்தாவின் தொடர் பில் இருக்கிறார். இந்தநிலை, ராஜஸ்தான் மாநிலத்திலும் தொடர் கிறது.
இம் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏவான பன்வார்லால் சர்மா, தன் மகன் அணில் சர்ம்மா போட்டியிட சீட் கேட்டார். இதற்கு காங்கிரஸ் தலைமை மறுத்தமையால், கட்சி பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டதுடன் காங்கிரஸையும் விமர்சனம் செய்து வருகிறார். செவ்வாய்கிழமை அவர் ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜேவையும் சந்தித்து இருப்பதும் சர்சைக்குள்ளாகி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT