Published : 05 Jun 2015 04:25 PM
Last Updated : 05 Jun 2015 04:25 PM
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ளாமலேயே விமர்சனம் செய்கின்றனர் என்று அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் ஆர்எஸ்எஸ். இயக்க தேசிய மட்ட 25 நாள் பயிற்சி அரங்கின் இறுதி நாளில் ஆர்எஸ்எஸ்.தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார் மோகன் பகவத்.
"ஆர்.எஸ்.எஸ். பற்றி புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு முன்பாகவே பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. தவறான தகவல்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் வரை வந்து சேர்ந்துள்ளது. நம்மை புரிந்து கொள்ளாதவர்கள் மீது இரக்கமே ஏற்படுகிறது. ஆனால் தவறான தகவல்களின் பரவல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒவ்வொரு முறை இந்து தர்மம் பற்றி பேசும்போது புருவங்கள் உயர்த்தப்படுகின்றன. சாதிப்பிரிவினைகளின் விளைவுகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன, நாம் இந்த நிலையை சீர்த்திருத்தம் செய்ய வேண்டும், நாம் பல விஷயங்களை கைவிட வேண்டியுள்ளது.
ஆகவே இந்து சமுதாயத்தின் ஒற்றுமைக்காக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் சமுதாய சகோதரத்துவத்துக்காக பாடுபடவேண்டும்.
வழிகாட்டுதலுக்காக உலகம் இந்தியாவை எதிர்நோக்குகிறது. வலுவான இந்திய சமூகத்தைக் கட்டமைத்து வலுவான இந்தியாவை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பாடுபடவேண்டும். பிரிவினையற்ற, சுயநலமற்ற, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை அதிகரித்து வருகிறது. அதே வேளையில் இந்தியாவிடமிருந்து எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்தியா வளர்ந்து வருகிறது ஏனெனில் தனிநபர்கள் இந்தியாவை முன்னுக்குக் கொண்டு செல்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நாம் இந்தியாவை உருவாக்க வேண்டும்.
நமது நாட்டின் வரைபடம் மாறிவருகிறது, பிரிட்டீஷ் ஆட்சியின் போது மாறியது, இனி வரும் எதிர்காலத்திலும் மாறும்” என்று சூசகமாக அவர் அண்டை நாடுகளை சுட்டிக்காட்டாமல் தெரிவித்தார் மோகன் பகவத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT