Published : 10 Jun 2015 08:49 AM
Last Updated : 10 Jun 2015 08:49 AM

லஞ்சம், தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்: ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள் மோதல் முற்றுகிறது - இன்று பிரதமரை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு

தெலங்கானா மேலவைத் தேர் தலில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொலைபேசி பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஆந்திர மாநிலத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் தெலங் கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மீது வழக்குகள் தொடரப் பட்டுள்ளன.

இருதரப்புக்கும் மோதல் முற்றியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க சந்திரபாபு நாயுடு டெல்லி விரைந் துள்ளார்.

லஞ்ச விவகாரம்

தெலங்கானா மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏவுக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். முன்பணமாகக் கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் ரூ.5 லட்சத்தையும் கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்விவகாரத்தில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் கடந்த 4 நாட்களாக காவலில் எடுத்து விசாரித்த காவல்துறையினர் நேற்று மாலை மீண்டும் நீதி மன்றத் தில் ஆஜர் படுத்தினர். மேலும் அவர்களின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த லஞ்ச விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாக தெலங்கானா மாநில அரசு குற்றம் சாட்டியது. சந்திரபாபு நாயுடு, மேலவை தேர்தலில் தனது கட்சிக்கு ஆதராக வாக்களிக்கும்படி பேசிய பேச்சுகளை தெலங்கானாவில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப் பியது. இதனால் இந்த பிரச்சினை பெரிதாக வெடித்தது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சந்திரபாபு நாயுடுவுக்கு சம்மன் அனுப்புவார்கள் என எதிர்பார்க் கப்பட்டது. இது ஆந்திரம், தெலங்கானா ஆகிய இரு மாநில அரசியலில் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. ஆந்திரத்தில் தெலங்கானா முதல்வருக்கு எதிராக பல காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

பரஸ்பரம் குற்றச்சாட்டு

இந்நிலையில், நேற்று முன் தினம் குண்டூர் மங்களகிரி பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை கடுமையாக தாக்கிப் பேசினார். ஹைதராபாத் இன்னமும் 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் சொந்தம் என்றும், தெலங்கானாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஆளுநரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டுமென்றும் சந்திரபாபு பேசினார். மேலும் தொலைபேசி ஒட்டு கேட்பது சட்டவிரோதமான செயல் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடி கொடுத்த தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் “ஹைதராபாத் ஒன்றும் சந்திரபாபு நாயுடுவின் வீடு இல்லை; தெலங்கானாவின் சொத்து. பிரம்மனாலும் சந்திரபாபு நாயுடுவை காப்பாற்ற முடியாது” என கடுமையாக விமர்சித்தார்.

ஆந்திர முதல்வர் ஆலோசனை

இந்நிலையில் நேற்று காலை ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடை பெற்றது. இதில் தெலங்கானா அரசு இதுவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் அவர்களது உறவினர் என 120 பேரின் பேச்சுகளை ஒட்டுக் கேட்டதாக காவல்துறை எச்சரித்து உள்ளதாக விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது. மேலும், மத்திய அரசுக்கு முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் இன்று காலை பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இது குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

இதனிடையே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் நேற்று டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து சந்திரபாபு நாயுடு மீது புகார் தெரிவிக்க உள்ளார். வரும் 12-ம் தேதி தெலங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவ் இது குறித்து புகார் தெரிவிக்க டெல்லி செல்ல உள்ளார். ஆக தெலங்கானா மேலவை தேர்தல் விவகாரம் டெல்லி வரை சென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x