Published : 19 Jun 2015 04:06 PM
Last Updated : 19 Jun 2015 04:06 PM
காணாமல் போன யானை மற்றும் அதன் குட்டியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக அசாம் நீதிமன்றம் ஒன்றில் வினோத வழக்கு பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இந்தியா - வங்கதேசம் என இரு நாட்டவர்களுக்கு இடையே மோதல் எழுந்துள்ளது.
அசாம் மாநில நீதிமன்றத்தில் வந்த வினோத வழக்கில் குட்டியுடன் யானை வன இலாகா துறையினரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் ஹைலாகண்டி மாவட்டம் வங்கதேச நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இம்மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கமாக போதை பொருள் மற்றும் ஆள் கடத்தல் உட்பட எல்லையில் நிகழும் கிரிமினல் குற்றங்கள் மீதான வழக்குகளே விசாரணைக்கு வரும். ஆனால், நேற்று (வியாழக்கிழமை) இங்கு ஒரு வினோத வழக்கு விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கின் விபரம்:
எல்லைப்பகுதியில் உள்ள லகிர்பாண்ட் எனும் கிராமத்தில் தனியாக தன் குட்டியுடன் இருந்த யானை அப்பகுதி காவல்துறையினரால் கடந்த திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது.
மறுநாள், வங்கதேச கிராமத்தில் இருந்து வந்த முகம்மது மகிலுஷுர் ரஹ்மான் என்பவர் அந்த யானைகள் தன்னுடயவை எனவும், இவை காணாமல் போனது குறித்து கடந்த ஜனவரி 28-ல் தன் கிராமத்தின் காவல்துறையினரிடம் புகார் பதிவு செய்ததாகவும் கூறினார்.
இதை மறுத்த மஞ்சுருல் இஸ்லாம் எனும் ஹைலாகண்டி கிராமவாசி, இந்த யானை தம்முடையவை எனவும், சுமார் எழு வருடங்களுக்கு முன் அது காணாமல் போனதாகவும் உரிமை கோரினார். வேறுவழியின்றி இந்த வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்ட ஹைலாகண்டி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரான ராஜன் சிங், அதன் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பினார்.
இதை நேற்று நீதிமன்றத்தில் இருதரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதியின் முன் (வளாகத்தில்) குட்டியுடன் ஆஜர்படுத்தப்பட்ட யானையை அசாம் மாநில வனத்துறையினரிடம் ஜூன் 23 வரை ஒப்படைக்க உத்தரவிட்டார். இதற்கு முன்பாக இவை மீது உரிமை கோரும் இருவர் மீதும் விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT