Published : 25 Jun 2015 10:18 AM
Last Updated : 25 Jun 2015 10:18 AM

ஹைதராபாத் சட்டம் ஒழுங்கு விவகாரம்: உயர்நீதி மன்றத்தில் ஆந்திர அமைப்பு பொதுநல வழக்கு

மாநிலப் பிரிவினை சட்டம் 8-ன் கீழ் ஹைதராபாத் நகரின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை ஆளுநர் வசம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

தெலங்கானா வாழ் ஆந்திர மக்கள் அமைப்பின் சங்க பிரதிநிதி வீரய்யா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், “அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பொது தலைநகராக ஹைதராபாத் விளங்கும் என்றும் இதன் சட்டம்-ஒழுங்கு விவகாரம் ஆளுநர் மேற்பார்வையில் இருத்தல் அவசியம் என்றும் மாநிலப் பிரிவினை சட்டம் 8-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இதனிடையே, நேற்று ஆந்திர அரசு ஊழியர் சங்க தலைவர் அஷோக் பாபு தலைமையில் விசாகப்பட்டினத்தில் அனைத்து சங்க பிரதிநிதிகளின் வட்ட மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில அமைச்சர்களும் பங்கேற்றனர்.

ஹைதராபாத்தில் அடுத்த 10 ஆண்டுகள் வரை ஆந்திர மாநில மக்களுக்கும் உரிமை உண்டு. எனவே, ஹைதராபாத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமல் பாதுகாக்க வேண்டிய கடமை மாநில பிரிவினை சட்டத்தின்படி ஆளுநருக்கு உள்ளது. ஆகையால் இதில் ஆளுநர் தலையிட வேண்டும். இல்லாவிட்டால் 1 லட்சம் அரசு ஊழியர்கள் டெல்லிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து ஓராண்டு முடிந்த நிலையில் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திராவின் இந்தக் கோரிக்கையை தெலங்கானா அரசு ஏற்க மறுத்து வருகிறது.

குறிப்பாக, தெலங்கானா மேலவைத் தேர்தலில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார். இதில் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு உள்ளதாக அவரின் தொலை பேசி உரையாடல்கள் தெலங்கானா டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக சந்திரபாபு நாயுடுவின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக, தெலங்கானா முதல்வர் மீது ஆந்திராவில் 87 வழக்குகள் பதிவானது. இந்த வழக்குகள் சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில்தான் இரு மாநிலங்களுக்கிடையே மோதல் அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x