Published : 06 Jun 2015 03:26 PM
Last Updated : 06 Jun 2015 03:26 PM
மேகி உள்ளிட்ட நூடுல்ஸ் வகையறாக்களில் காரீயம் அதிக அளவில் இருப்பதற்கு காரணம் மண் என்று விசாரணை செய்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெஸ்லேயின் மேகி உள்ளிட்ட நூடுல்ஸ் வகைகளில் வெங்காயம் உள்ளது. மேகியில் பயன்படுத்தப்படும் வெங்காயம் விளையும் மண் காரணமாக காரீயம் அதில் அதிகமாகியிருக்கலாம் என்கின்றனர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.
இது குறித்து இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒய்.எஸ்.மாலிக் தி இந்து (ஆங்கிலம்) இதழில் கூறும் போது, இவ்வகை நூடுல்ஸ்களின் டேஸ்ட் மேக்கர்களில் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. இதனால் வெங்காயம் விளையும் மண் தன்மையினால் காரீயம் அதிகமாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது” என்றார்.
அரிதாகவே உணவுப்பொருள் பரிசோதனை:
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் 2014-15 அறிக்கையில் பெரும்பாலும் பால் மற்றும் பால்பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் நீர், மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதே இடம்பெற்றுள்ளன. அரசு சோதனை மையங்களில் பாக்கெட் உணவுப்பொருட்கள் சோதனை செய்யப்படுவதில்லை. இவ்வாறு உணவுப்பொருட்களை சுதந்திரமாக சந்தைகளில் விற்க அனுமதிப்பது நுகர்வோரை அறியாமையில் ஆழ்த்தும் செயல் அல்லவா? என்று கேட்ட போது,
“2006-ம் ஆண்டு உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 4 ஆண்டுகளாக மட்டுமே செயலில் உள்ளது. இச்சட்டத்தின் பிரிவு 26-ன் படி உணவு வர்த்தக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. எனவே அமலாக்கம் தொடர்பாக தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அதிரடி சோதனைகளில் இறங்கினால் இன்னொரு சோதனை ராஜ்ஜியம் நடப்பதாக புகார்கள் எழும்” என்றார் ஒய்.எஸ்.மாலிக்.
உணவுப்பொருட்களில் காரீயம் பற்றி மண் கலப்படம் மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நெட்வொர்க் அமைப்பின் பொதுச்செயலரும், டெல்லி பல்கலைக் கழகத்தின் மூலக்கூறு உயிரியல் பேராசிரியருமான ரூப் பால் கூறும்போது, "உணவுச்சங்கிலியில் காரீயம் போன்ற கடின உலோகக்கூறுகள் கலப்பதற்கு முதன்மைக் காரணம் நீர்நிலைகளில் தொழிற்சாலை கழிவு மற்றும் நச்சுப் பொருட்கள் கலக்காமல் பாதுகாக்கும் போதிய சுற்றுசூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு ஒழுங்கு முறை இல்லாததே" என்றார்.
பனாரஸ் இந்துப் பல்கலைக் கழக பேராசிரியர் பி.டி.திரிபாதி கூறும்போது, சுற்றுச்சூழல் அறிவியில் மற்றும் தொழில்நுட்ப மையம் மேற்கொண்ட ஆய்வில் வாரணாசியில் உருவாகும் கழிவுகளில் அதிக அளவு காரீயம், குரோமியம் மற்றும் நிக்கல் கலந்துள்ளன. காரணம் இங்குள்ள ஆயிரக்கணக்கான சிறு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுப்பொருட்களே. கழிவுநீர் சுத்திகரிக்கப்படும் போது கூட இத்தகைய உலோகக்கூறுகள் அதிலிருந்து அகற்றப்படுவதில்லை. இதுதான் பிற்பாடு கோதுமை, மற்றும் காய்கனிகள் விளைச்சலிலும் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.
இந்த ஆய்வுக் கழகத்தின் முடிவுகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
“இத்தகைய கடின உலோகக் கூறுகள் மாசடைந்த நதிநீர் வாயிலாக விளை நிலங்களிலும் சென்றடையும் போது அதன் மண் இதனை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் பிறகு உணவுச்சங்கிலிக்குள் நச்சுப்பொருட்கள் செல்லும் போது, உயிரியல் பெருக்கமடைகிறது” என்கிறார் பேராசிரியர் திரிபாதி.
இவர், தற்போது மேகியினால் எழுந்த சர்ச்சைகளை கோககோலா சர்ச்சையுடன் ஒப்பிடுகிறார். “எந்த நீர் குளிர்பானம் தயாரிக்கப் பயன்படுகிறதோ, அந்த நீர் இத்தகைய உலோகக் கூறுகளை உறிஞ்சிக் கொண்ட நீர், இதனால் பூச்சிக்கொல்லி மருந்து அதில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது” என்றார்.
எனினும் குறைந்த அளவில் இத்தகைய உணவுப்பொருட்களை எடுத்துக் கொண்டால் உடல் அதற்கு வளைந்து கொடுக்கும், அளவுக்கு மீறி காரீயம் போன்ற கூறுகள் இருக்கும் போது உடலுக்கு அது போதுமான கேட்டை விளைவிக்கும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக காரீயம் உடலுக்குள் சுவாசம் வழியாகவோ, உணவுக்குழல் வழியாகவோ செல்லும் போது மூளை மற்றும் கிட்னியை பாதிக்கிறது. பெரியவர்களுக்கு இத்தகைய நோய்களை ஏற்படுத்தும் காரீயம், வளரும் நிலையில் உள்ள குழந்தைகளின் நரம்பு அமைப்பை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT