Published : 04 Jun 2015 08:50 AM
Last Updated : 04 Jun 2015 08:50 AM
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு சாதித்தது என்ன என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிகேள்வி எழுப்பி உள்ளார்.
ஆந்திர அரசைக் கண்டித்து குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆட்சி அமைந்து வரும் 8-ம் தேதி ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஆனால் அவர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் ஏதையும் நிறைவேற்றவில்லை.
உதாரணமாக, விவசாயக் கடன் முழுவதையும் ரத்து செய்யப்படும் என்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதுபற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் ஆட்சிக்கு வந்த உடன் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகக் கூறினார். இதுவரை ஒருவருக்கு கூட வேலை வழங்கவில்லை.
பாஜகவுடன் கூட்டனி அமைத்து, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாகக் கூறினார். ஆனால் இப்போது சிறப்பு அந்தஸ்து கிடைத்துவிட்டால் மட்டுமே மாநிலம் வளர்ச்சி அடையாது எனக் கூறுகிறார்.
ஓராண்டாகியும் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற ஏன் முயற்சி செய்யவில்லை. இதிலிருந்தே இவர் ஒரு சந்தர்ப்பவாதி என்பது தெளிவாகிறது. இதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்த ‘சமர தீட்சை’ எனும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் முதல் வருக்காக தயாரிக்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இந்த வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மக்களே மதிப்பெண் வழங்க வேண்டும் என ஜெகன் மோகன் கேட்டுக்கொண்டார்.
இதன்படி, ஓராண்டில் அரசு செய்ய தவறிய வாக்குறுதிகள், செய்த வளர்ச்சிப் பணிகளுக்கு பொதுமக்கள் மதிப்பெண் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT