Published : 11 May 2015 11:33 AM
Last Updated : 11 May 2015 11:33 AM

ஹைதராபாத்தில் விளையாட்டு வினையானது: சூதாட்டத்தில் இளைஞர் கொலை

ஹைதராபாத், பாத்த பஸ்தி பகுதியை சேர்ந்தவர் யூசப். இவர் துபாயில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நபில் (17).

கடந்த 3-ம் தேதி வீட்டில் இருந்த நபீலை, அவரது நண்பர்கள் வெளி யில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் பைக் விபத்தில் நபில் இறந்து விட்டதாக அவரது சடலத்தை அதே நண்பர் கள் கதறி அழுதபடி வீட்டுக்கு கொண்டு வந்தனர். இதை நம்பிய அவரது தாய் துபாயில் உள்ள யூசப்புக்கு தகவல் கொடுத்தார். மறுநாள் அவர் ஹைதராபாத் வந்த பிறகு நபிலின் இறுதிச் சடங்குகள் நடந்தன.

ஆனால் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக யூசப் கடந்த 5-ம் தேதி பாத்த பஸ்தி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நபில், டபிள்யு.டபிள்யு.எஃப். ரக சண்டைகள் போன்று, நண்பர்களிடையே நடைபெற்ற சூதாட்ட தெருச்சண்டையில் இறந்த வீடியோ காட்சிகள் செல்போனில் பரவின. இதை அறிந்து யூசப், கடந்த 7-ம் தேதி ஹைதராபாத் (தெற்கு) காவல்துறை துணை ஆணையர் சத்யநாராயணாவிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஹைதராபாத்தில் உமர் பேக் என்பவர் கல்லூரி சூதாட்டத்தின் பெயரில் மாணவர்களிடையே தெருச் சண்டைகள் நடத்துகிறார். இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்த சண்டையில் வெற்றிபெறு பவருக்கு, பார்வையாளர்களால் மொத்தமாக கட்டப்பட்ட பணத் தில் பாதி வழங்கப்படும்.

தோல்வி அடைந்தவருக்கும் சிறிது பணம் வழங்கப்படுகிறது. இதனால் பலர் இதுபோன்ற சண்டைகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

நபிலை, பாத்த பஸ்தியில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு தெருவுக்கு அவரது நண்பர்கள் அழைத்துச் சென்று தெருச் சண்டையில் விட்டுள்ளனர். இதில் நபில், அஜீஜ் அகமது ஆகிய இருவர் பங்கேற்றுள்ளனர். இதில் அஜீஜ் அகமது நபிலை சரமாரியாக தாக்கியுள்ளார். இறுதியில் மாறி மாறி தன் தலையிலும், முகத்திலும் விழுந்த குத்துகளைச் சமாளிக்க முடியாமல் நபில் உயிரிழந்துள்ளார்.

இதனை அங்கு கூடியிருக்கும் சில மாணவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது ஹைதராபாத் நகரில் பரப்பரப்பாக உலா வருகிறது.

இறந்து போன நபிலை உடனடியாக அருகேயுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விபத்தில் இறந்ததாக பொய் கூறியுள்ளனர். இந்த சண்டையில் நடுவராக இருந்த வசீம் என்ற மாணவர், நபிலை அடிக்கச் சொன்ன சுல்தான் என்ற மாணவர், இந்த சண்டையை நிர்வகித்த உமர் பேக், நபிலை அடித்துக் கொன்ற அஜீஜ் அகமது உட்பட மொத்தம் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நபிலின் உடல்இன்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனிடையே நேற்றும் பாத்த பஸ்தியில் 3 இடங்களில் சண்டைகள் நடந்துள்ளது.

போலீஸ் அறிவுரை

ஹைதராபாத் (தெற்கு) காவல் துறை துணை ஆணையர் சத்ய நாராயணா கூறும்போது, “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும், அவர்களது நண்பர்களையும் அவ்வப்போது கண்காணிப்பது அவசியம். பிள்ளைகளுடன் பெற்றோர்கள் கலந்து பேசுவது முக்கியம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பிள்ளைகள் பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

தந்தை கண்ணீர்

நபிலின் தந்தை யூசப் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “நபில் சண்டையிட்ட வீடியோ காட்சிகளை என்னால் பார்க்க முடியவில்லை. மகன் இறப்பதை எந்த தந்தையால் பார்க்க முடியும்? இது போன்ற சம்பவங்களை போலீஸார் தடுத்து நிறுத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x