Last Updated : 28 May, 2015 09:25 AM

 

Published : 28 May 2015 09:25 AM
Last Updated : 28 May 2015 09:25 AM

ஏழை மக்களை ஒதுக்கித் தள்ளுகிறது மோடி அரசு: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஏழை மற்றும் பின்தங்கிய மக்களை மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கித் தள்ளுகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக கேரளாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். திருச்சூர் பகுதிக்கு நேற்று சென்ற அவர், மீனவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியில் இருந்து விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட ஏழைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கித் தள்ளி வருகிறது.

நாட்டில் உள்ள மக்களை முன்னேற்றுவதன் மூலம்தான் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும். ஆனால் மத்திய அரசு தங்களின் மோசமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தவறான பாதையில் செல்கிறது.

பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒதுக்கி வைத்துவிட்டால் முன்னேற்றம் எப்படி சாத்தியமாகும். “பாஜக தலைமையிலான அரசு ஏன் எங்களை அழிக்க நினைக்கிறது”, “எங்கள் பயிர்களுக்கு ஏன் குறைந்தபட்ச விலையை கூட வழங்குவதில்லை”. “இயற்கை சீற்றத்தால் பயிர்கள் அழியும்போது ஏன் இழப்பீடு தருவதில்லை” என்பதைதான் பஞ்சாப், மகாராஷ்டிராவுக்கு நான் சென்றபோது அங்குள்ள விவசாயிகள் என்னிடம் எழுப்பிய கேள்விகளில் முக்கியமானவை.

விவசாயிகளும், மீனவர்களும் ஏற்கெனவே நலிவடைந்துள்ளனர். அவர்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் பயனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க சட்டம் இயற்ற வேண்டும். ஆனால் மத்திய அரசு, விவசாயிகளை பாதுகாக்க உள்ள சட்டங்களை அழித்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பிடுங்க முயற்சிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது நாட்டின் ஆன்மாவுடன் மோதும் செயல். இந்த மோதலில் அரசு வெற்றி பெற முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

மீன்பிடி தடைக்காலத்தை 47 நாட்களில் இருந்து 61 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்து கேரள மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களுடன் செல்ஃபி

மீனவர் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, மீனவ இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக்கொள்வதில்தான் கவனம் செலுத்துகிறார் என அண்மையில் காங்கிரஸ் விமர்சனம் செய்திருந்தது. அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தன்னுடன் யாரும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்காக, பிரதமர் மோடி மீது ராகுல் பழிதூற்றக்கூடாது. மோடி எங்கு சென்றாலும் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில்தான், ராகுல் மீனவ இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x