Published : 18 May 2015 08:54 AM
Last Updated : 18 May 2015 08:54 AM
பாகிஸ்தானில் பதுங்கியிருந்து இந்தியாவில் செயல்படும் தீவிரவாதிகளின் புதிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட உள்ளது. இதில் நிழல் உலக தாதாவான 59 வயது தாவூத் இப்ராஹிம் இடம்பெறவுள்ளார்.
கடந்த வாரம் முடிந்த நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜக உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரத்திபாய் சவுத்ரி பதில் அளிக்கும்போது, “தாவூத் இருக்குமிடம் தெரிய வில்லை” என்றார்.
இதனால் பெரும் தர்மசங்கடத் துக்கு ஆளான பிரதமர் நரேந்திர மோடி அரசு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மூலம் மறு அறிக்கை வாசித்தது. அதில், 1993-ல் மும்பை யில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலின் குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாக அவர் விளக்கம் அளித்தார். இதை உறுதி செய்யும் வகையில் தாவூத் உட்பட பாகிஸ்தானில் உள்ள சுமார் 20 தீவிரவாதிகளின் புதிய பட்டியலை வெளியிட மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை தயார் செய்து கொடுப் பதற்கு, இங்கு தனிப்பிரிவு செயல் படுகிறது. இவர்களால் அனுப்பப் படும் பதிலை கிளிப்பிள்ளை போல் அமைச்சர்கள் அப்படியே படித்து விடுவது வழக்கமாக உள்ளது. இந்தவகையில், தாவூத் மீதான பதிலில் நடந்த தவறை சரிசெய்யும் வகையில் இப்போது புதிய பட்டியல் தயாரித்து பாகிஸ் தானுக்கு அனுப்பப்பட உள்ளது.
கடைசியாக 2012-ல் தாவூதின் 3 பாஸ்போர்ட் எண்கள் மற்றும் தங்கியுள்ள விலாசங்களுடன் ஒரு பட்டியல் அனுப்பியும் பலனில்லை. இதனால் இந்தப் பட்டியலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமர்பிக்கவும் இந்தியா திட்டமிட்டு வருகிறது” என்றனர்.
தற்போது தயாராகும் பட்டிய லில் தாவூதுடன், ஹிஸ்புல் முஜாகி தீன் இணை நிறுவனர்கள் ரியாஸ் பட்கல், அமீர் ரெஜா கான், தலைமை வெடிகுண்டு தயாரிப்பாளர் ஜியா உர் ரஹ்மான் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற உள்ளன.
கொல்கத்தாவில் பிறந்த அமீர், அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் தாக்குதல் நடத்தியவர். இவர்கள் மீது இந்தியாவில் நீதிமன்ற விசாரணை நடத்த உதவும்படி பாகிஸ்தான் அரசை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்த உள்ளது. இத்துடன் தாவூதை பிடிப்பதற்காக தேசிய உளவு அமைப்பான என்.ஐ.ஏ. சார்பில் தனிக்குழுவையும் உள்துறை அமைச்சகம் அமைக்க உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக செயல் பட்டு வரும் தாவூத், அமெரிக்கா சார்பிலும் தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்கப்பட்டவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT