Published : 03 May 2015 08:51 AM
Last Updated : 03 May 2015 08:51 AM
ஆந்திர வனப்பகுதியிலிருந்து செம்மரங்களை வெட்டி கடத்தும் கடத்தல்காரர்களுக்கு அம்மாநில போலீஸாரும் வனத்துறையினரும் உதவி செய்து வருவது போலீஸாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 40-க்கும் மேற்பட்ட கடத்தல் காரர்கள் மீது வனத்துறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஆந்திர போலீஸார் ‘ஆபரேஷன் ரெட்’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள செம்மரக் கடத்தல்காரர்களை தேடி கைது செய்து வருகின்றனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரைத் தொடர்ந்து ஆந்திர போலீஸார் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த சவுந்தர்ராஜனை ஆந்திர போலீஸார் சமீபத்தில் கைது செய்து சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி தெரிவிக்கும்போது, “இந்த விசாரணையில் சவுந்தர் ராஜனிடம் செம்மரங்கள் எப்படி கடத்தப்படுகிறது? ஏஜெண்ட்டுகள் போல் செயல்பட்டு தமிழக கூலி தொழிலாளர்களை ஆந்திராவுக்கு அழைத்து வருபவர்கள் யார்? கூட்டாளிகளின் விவரம் மற்றும் உதவி செய்வோரின் விவரங்கள் போன்றவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதிலிருந்து சில முக்கிய தகவல்களை போலீஸார் சேகரித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
இதில் குறிப்பாக செம்மரக் கடத்தலுக்கு ஊர்காவல் படையினர் முதல் டி.ஸ்.பி. வரையிலான போலீஸ் துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் உதவி வருவதாகக் கூறியதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு செம்மரம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. அப்போது முதல் செம்மரங்களுக்கு வெளி நாடுகளில் தேவை அதிகரித்தது. இதனால் ஒரு டன் செம்மரம் ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் வரை விற்கப்படுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளில் ஆந்திராவிலிருந்து 40 ஆயிரம் டன் வரை செம்மரங்கள் கடத்தப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித் துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்ததால், போலீஸார், வனத்துறை அதிகாரிகளின் உதவியால் செம்மரங்கள் நாடு கடத்தப்பட்டு வந்தன.
இதுகுறித்து கடந்த ஆண்டு அப்போதைய சித்தூர் மாவட்ட எஸ்.பி. ராமகிருஷ்ணா, ரகசிய விசாரணை நடத்தி ஆந்திர அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் செம்மர கடத்தலுக்கு 8 டிஎஸ்பிக்கள், 17 இன்ஸ்பெக்டர்கள், 24 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 6 வனத்துறை அதிகாரிகள் உதவி வருவதாகக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு கைமாறாக கடத்தல்காரர்கள் இவர்களுக்கு விலை உயர்ந்த கார், வீடு, நகை உள்ளிட்டவற்றை பரிசாக வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆந்திர அரசு, உதயகுமார், டிஎஸ்பி மீது மட்டும் துறை ரீதி யான நடவடிக்கை எடுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT