Last Updated : 24 May, 2015 10:12 AM

 

Published : 24 May 2015 10:12 AM
Last Updated : 24 May 2015 10:12 AM

பல் மருத்துவக் கல்லூரிகள் கிராமங்களை தத்தெடுக்க உத்தரவு

பற்கள் பாதுகாப்பு குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமங்களை பல் மருத்துவக் கல்லூரி கள் தத்தெடுக்க உள்ளன. இதற்கான உத்தரவை நாட்டின் அனைத்து பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் பிறப் பித்துள்ளது.

உடல்நலக் குறைவுகளுக்கு பல் நோய்களும் ஒரு முக்கியக் கார ணமாக இருப்பினும், பற்களுக்கு பெரும்பாலான மக்கள் குறைந்தபட்ச கவனமே அளிக்கின்றனர். வடஇந்திய கிராமங்களில் மக்கள் புகையிலை, பீடா, குட்கா, பான் மசாலா போன்ற வற்றை பயன்படுத்துவதால் பல்வேறு பல் உபாதைகள் மட்டுமின்றி புற்று நோயாலும் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இவற்றுக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் அண் மையில் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தங்கள் சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள மக்களிடம் பற்களை பேணு வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

‘தி இந்து’வுக்கு கிடைத்த தகவலின் படி அந்த உத்தரவில், “நாட்டின் ஒவ்வொரு பல் மருத்துவக் கல்லூரியும் குறைந்தபட்சம் 2 முதல் 4 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும். சுற்றுப் பகுதியில் பழங்குடியினர் பகுதிகளும் இருந்தால், அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பற்களை பாதுகாக்கத் தவறுவோரில் குழந்தைகள் அதிகம் என்பதால், அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005-ல் இந்திய பல் மருத்து வர்கள் சங்கம் சார்பில் வெளியான புள்ளி விவரத்தில், “நாட்டின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். ஆனால் 2 சதவீதத்துக்கும் குறைவான பல் மருத்துவர்களே இங்குள்ளனர். ஊரகப் பகுதிகளில் 95 சதவீத மக்கள் பல் ஈறுகளின் பாதிப்பால் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இங்கு 50 சதவீதம் பேர் மட்டுமே பற்களை துலக்க ‘டூத் பிரஷ்’ பயன்படுத்துகின்றனர். பல் நோயால் பாதிக்கப்படும் கிராமப்புற மக்களில் வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே பல் மருத்துவர்களிடம் சென்று முறையாக சிகிச்சை பெறுகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டின் கிராமங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் வெளியிடு வது புதிதல்ல. இவர்கள் ஏற்கெனவே வெளியிட்ட புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு கிராமப் புறங்களில் நடமாடும் பல் மருத்துவ கிளினிக் திட்டத்துக்கு உத்தரவிடப் பட்டது. இதை நடைமுறைப்படுத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளால் பெரும்பாலான கிராமங்களுக்கு இன்னும் கூட முழுமையான சேவை அளிக்க முடியாத நிலை உள்ளது.

மேலும் கிராமப்புற மக்களுக்கு பற்களுடன் பொது மருத்துவ வசதி குறைபாடும் உள்ளது. எனவே பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள் கிராமப் புறங்களில் 2 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பால் இந்த உத்தரவை அரசு கைவிட வேண்டிய தாயிற்று.

இந்த வகையில் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தற்போது இடப்பட்டுள்ள இந்த உத்தரவும் அதன் தன்மையை பொறுத்தே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 25,000 மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். பல் மருத்துவர்களின் விகிதமானது நாட்டின் நகர்ப்புறங்களில் 10,000 பேருக்கு ஒருவர் என உள்ளது. கிராமப்புறங்களில் ஒன்றரை லட்சம் மக்களுக்கு ஒரு மருத்துவர் என்றுள்ளது. கிராமப்புற விகிதம் குறைவாக இருப்பதற்கு, பல் மருத்துவர்கள் நகரங்களில் பணியாற்ற விரும்புவதே காரணம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x