Published : 01 May 2015 04:20 PM
Last Updated : 01 May 2015 04:20 PM
நம் நாட்டின் நடுத்தர வகுப்பினரையும் காரில் பயணம் செய்ய தூண்டிய முதல் கார், மாருதி. ஜப்பானின் சுசிகி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய இந்திய தயாரிப்பின் மாருதி 800.
இதன் முதல் தயாரிப்பில் உருவான கார் இன்று, அதன் உரிமையாளர் வீட்டு வாசலில் துரு பிடித்துக் கொண்டிருக்கிறது.
சுமார் 32 வருடங்களுக்கு முன் டெல்லியின் தென் பகுதியிலுள்ள கிரீன் பார்க்கில் வசிக்கும் ஹர்பால் சிங்கிற்கு அடித்தது அந்த அதிர்ஷ்டம். அப்போது, நாட்டின் அனைத்து மாநிலவாசிகளில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த மாருதி 800 வகையின் முதல் தயாரிப்பு ஹர்பாலுக்கு கிடைத்தது.
முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கானவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிர்ஷ்டசாலியான ஹர்பாலிடம், கடந்த டிசம்பர் 13, 1983-ல் மாருதி 800 தயாரிப்பின் முதல் கார் சாவியை பிரதமர் இந்திரா காந்தி ஒப்படைத்தார்.
இதை குர்கானில் உள்ள மாருதி தொழிற்சாலையில் பெற்றவருக்கு தம் வீடு வரை கிட்டத்தட்ட ஊர்வலமாகவே வர வேண்டி இருந்தது. அந்த அளவிற்கு வழியில் ஆங்காங்கே பொதுமக்கள் அவரது காரை நிறுத்தி, தொட்டு விசாரித்து, மாலைகள் இட்டு மகிழ்ந்தனர். மறுநாள், தனது காரில் 250 கி.மீ தொலையிலுள்ள மீரட் வரை ஒரு ஜாலி பயணம் சென்று வர கிளம்பிய போதும் அதேபோல் நிகழ்ந்தது.
இந்த காரை பெற்றது முதல் வேறு எதையும் பயன்படுத்தாமல் தன் மாருதி 800 மட்டும் சென்று வந்தார் ஹர்பால். மாருதி 800-க்கு பின் வந்த மாடலான மாருதி சென் வகையை வாங்கிக் கொள்ளும்படி ஹர்பாலிடம் அவரது நண்பர்கள் கூறியதையும் மறுத்து இருக்கிறார். இவர், கடந்த 2010 ஆம் ஆண்டில் இறந்தது வரை அந்த கார் ஹர்பாலின் கிரீன் பார்க் பகுதியின் இல்லத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
இதை காண்பதற்காக அக்கம், பக்கம் உள்ள ஊர்களில் இருந்து பல பொதுமக்கள் வந்து சென்ற காலங்களும் இருந்தன. அதே காரில் பயணம் செய்து வந்த ஹர்பாலின் மனைவியான குல்ஷன்பிர் கௌர், தன் கணவர் மறைந்த இரு வருடங்களில் இறந்தார். இதன் பிறகு, அவர்களது கார் துருபிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இது குறித்து 'தி இந்து'விடம் ஹர்பாலின் மருமகனான தேஜேந்தர் அலுவாலியா கூறுகையில், "அப்போது 47,500 ரூபாய் விலையுள்ள காரை ரூபாய் ஒரு லட்சம் அதிகமாக கொடுத்து வாங்க பலரும் முயன்றனர். இதை எனது மாமா விற்க விரும்புவதாக வெளியான தவறான செய்தியால் எங்களுக்கு அன்புத் தொல்லைகள் அதிகமாக இருந்தது.
இப்போது, வாசலில் நின்று வீணாகிக் கொண்டிருக்கும் காரை, அரசு அல்லது மாருதி நிறுவனம் பெற்று பாதுகாத்து வைக்க வேண்டும். இதற்காக நாம் எந்த தொகையையும் எதிர்பார்க்காமல் அளிக்க தயாராக இருக்கிறோம்" எனக் கூறுகிறார்.
காலை எழுந்தவுடன் பூஜைக்கு முன்பாக இந்த காரை தன் கைகளால் நாள்தோறும் கழுவி ஹர்பால் சுத்தம் செய்வது கிரீன் பார்க்வாசிகளுக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறது. 'இவ்வளவு சிறிய அளவிலான காரில் ஐந்து பேரால் எப்படி அமர முடிகிறது!' எனப் பார்ப்பவர்கள் தங்களுக்குள் வியப்புடன் பேசிக் கொள்வார்கள் எனப் பெருமைப்படுகிறார்கள் ஹர்பாலின் குடும்பத்தினர்.
அப்போது, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஹர்பாலுடன், இந்திரா காந்தியின் மகனான ராஜீவ் காந்தியும் பணியாற்றி வந்திருக்கிறார். இதனால், ஹர்பால் முதல் கார் பெறும் நிகழ்ச்சிக்கு ராஜீவ் காந்தியும் வந்திருக்கிறார். தம் தாயின் கையால் சாவியை பெற்று மேடை இறங்கிய ஹர்பாலை கட்டித் தழுவி மகிழ்ந்திருக்கிறார் ராஜீவ்.
இவ்வாறு பல்வேறு வகையான மகிழ்ச்சியான தருணங்களுடன் வரலாற்று சிறப்பானதான முக்கியத்துவம் பெற்றிருந்த மாருதி 800 –ன் முதல் கார் தற்போது ஹர்பாலின் வீட்டு முன் மழைக்கும், வெயிலுக்கும் தாங்க முடியாமல் துருபிடித்துக் கொண்டிருக்கிறது.
வெள்ளை நிறத்தில் டி.ஐ.ஏ 6479 எனும் எண்ணுள்ள அந்தக் காரின் முக்கியத்துவம் அறிந்த கிரீன் பார்க்கின் மூத்தகுடிகள் அதைக் கடக்கும் போதெல்லாம் அதன் பெருமையை முணுமுணுக்கத் தவறுவதில்லை.
கடந்த 2008 ஆம் ஆண்டில் வந்த மாருதியின் 25 ஆவது ஆண்டு விழாவில் அந் நிறுவனம் ஹர்பாலிடம் காரை பெற்று சென்று தொழிற்சாலையில் வைத்து கொண்டடியது. ஆனால், அதன் பிறகு ஹர்பாலின் குடும்பத்தாராலும் பாதுகாத்து வைக்க முடியாத நிலைமையில் இருப்பதால் அந்த முதல் மாருதி 800 காரை, அதை தயாரித்த நிறுவனம் பெற்றுக் கொள்வதுதான் பொறுத்தமானதாக இருக்கும் என்பது டெல்லிவாசிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.
வெளிநாட்டு கார்கள் மீது குறையாத மோகம்:
நம் நாட்டை அடிமையாக்கி ஆங்கிலேயர்கள் ஆண்ட போது அவர்கள் தயாரிப்பை வெறுத்த இந்தியர்களுக்கு அதன் மீது விடுதலைக்கு பின் மோகம் அதிகரித்தது. இதில் குறிப்பாக பல செல்வந்தர்களுக்கு வெளிநாட்டு கார்கள் மீது இருந்த மோகம் இன்னும் கூட குறைந்தபாடில்லை.
இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை இந்தியாவில் விற்று 1980 ஆம் ஆண்டுகள் வரை அதிக லாபம் பார்த்தார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை பல மடங்கு கூட்டியதுடன், வெளிநாட்டு தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பொருட்டு ஒரு தொழிற்சாலையை துவக்க விரும்பினார்.
மன்மோகன் சிங்கிடம் மாருதி:
ஹரியானாவின் குர்கானில் ஜப்பான் சுசுகி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது மாருதி நிறுவனம். இதன் முதல் தயாரிப்பாக 800 சிசி திறனுள்ள மாருதி 800, பல்வேறு வகையான மாடல் கார்களின் அறிமுகத்திற்கு பின்பும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நடுத்தர குடும்பங்களின் கனவாக இருந்த மாருதி 800 தயாரிப்பு, கடந்த ஜனவரி 18, 2014-ல் நிறுத்தப்பட்டது. அதுவரை அம்பாஸிட்டர் கார்களுக்கு அடுத்தபடியாக சுமார் 2.87 மில்லியன் கார்கள் தயாரித்து விற்கப்பட்டுள்ளன. எனவே, இன்னும் பத்து வருடங்களுக்கு அதன் உதிரிப்பாகங்கள் கிடைக்கும் என அந்நிறுவனம் தன் மாருதி 800 தயாரிப்பை நிறுத்திய போது அறிவித்தது.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் தனது முதல் காராக மாருதி 800 ஐ 1996-ல் வாங்கி பயன்படுத்தி வந்தார். இன்னும் அதை தன் சொத்துக்களில் ஒன்றாக காண்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT