Published : 03 May 2015 10:38 AM
Last Updated : 03 May 2015 10:38 AM
உத்தரப் பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் முஸ்ஸிம் பெண்கள் தொடர்பாக வெளியிட்ட புள்ளி விவரம் ஏற்புடையதல்ல என்று பத்வா (தடை) விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த அம்மாணவி தனது கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் மகாத்மா ஜோதிபா புலே ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் சட்டத்துறை ஆய்வு மாணவியாக இருப்பவர் சுமய்யா அஞ்சும். இவர் அத்துறையின் பேராசிரியர் அணில் சிங் வழிகாட்டுதலின்படி ‘முஸ்லீம் பெண்களின் திருமணம் மற்றும் விவாகரத்து’ என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்காக சுமய்யா, அப்பகுதியில் பல்வேறு நிலைகளில் வாழும் 100 முஸ்லிம் பெண்களிடையே ‘பாதுகாக்கப்பட்ட சட்டம் மற்றும் சமூக நீதி சட்டங்களில் முஸ்லிம் பெண்களின் நிலை’ எனும் பெயரில் எடுத்த ஆய்வு சர்ச்சைக்குள்ளானது.
அதில் 40 சதவீத பெண்கள் முஸ்லிம்களுக்கான ஷரியத் சட்டத்தை ஏற்க முடியாது என்றும் 30 சதவீதத்தினர் விவாகரத்து செய்வதில் தங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஷரியத் சட்டப்படி சொத்தில் தங்களுக்கு சமபங்கு கிடைக்காத நிலையை மாற்ற வேண்டும் என 80 சதவீத பெண்களும், விவாகரத்துக்குப் பிறகு கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய ‘இத்தத்’ எனும் கால அவகாசத்தை நீக்க வேண்டும் என 20 சதவீத பெண்களும் தெரிவித்த தாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி அறிந்த பரேலியின் அல்-ஹசரத் தர்காவின் முஸ்லிம் மவுலானாக்கள், “ஷரியத் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. இதைச் செய்யுமாறு கோருவதற்கு எவருக்கும் உரிமை இல்லை” எனக் கூறி அந்த ஆய்வு மீது கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பத்வா விதித்தனர்.
இதுகுறித்து ஆய்வு மாணவி சுமய்யா கூறும்போது, “முஸ்லிம் பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக இந்த சர்வே எடுக்கப் பட்டது” என்றார். எனினும், பரேலி மவுலானாக்களின் பத்வாவுக்கு உள்ளான அவரது ஆய்வு, உ.பி. முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு அந்த மவுலானாக்களுக்கு வடஇந்திய முஸ்லிம்கள் இடையே கிடைக்கும் முக்கியத்துவமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இந்த முடிவால் அச்சமடைந்த அந்த மாணவி சுமய்யா, தனது ஆய்வை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உதவி பேராசிரியர் அணில் சிங் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இதுபோல முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது முதன்முறை அல்ல. இதற்கு முன்பு முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முன்பும் பலமுறை தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. சுமய்யா தனது ஆய்வை சமர்ப்பித்த பிறகு இதுவரை பல்கலைக்கழகத்துக்கு அவர் திரும்பவில்லை. அவரது கைப்பேசி எண்ணிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் தனது ஆய்வை தொடர்வாரா என்பது சந்தேகமாக உள்ளது” என்றார்.
இதற்கிடையே, அல்-ஹசரத் தர்காவின் அங்கமான தெஹரிக்-ஏ-தஹபூஸ் சுன்னத் சார்பிலும், சுமய்யா எடுத்த தலைப்பின் கீழ் அதே பகுதி முஸ்லிம் பெண்கள் இடையே ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அனைத்து பெண்களும் தாங்கள் சுமய்யாவிடம் கூறிய தகவல் தவறாக வெளியாகி இருப்பதாக தெரிவித்திருப்பதாக தஹபூஸ் சுன்னத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT