Last Updated : 13 May, 2015 12:50 PM

 

Published : 13 May 2015 12:50 PM
Last Updated : 13 May 2015 12:50 PM

அரசு விளம்பரங்களில் முதல்வர், அமைச்சர் படங்களுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவால் அரசு விளம்பரங்களில் மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரசு விளம்பரங்களை முறைப்படுத்த கடந்த ஏப்ரல் 24-ம் தேதி 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரபல கல்வியாளர் பேராசிரியர் என்.ஆர்.மாதவ மேனன் தலைமையிலான இக்குழுவில் மக்களவை முன்னாள் செயலாளர் டி.கே.விஸ்வநாதன், சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அரசியல் ஆதாயம் பெறும் வகையில் தொலைக்காட்சி, நாளேடு களில் அரசும் அதிகாரிகளும் வெளியிடும் விளம்பரங்களில் அரசு நிதி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்குமாறு இக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 17-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விளம்பரங்களை நெறிப் படுத்த வழிகாட்டு விதிகள் வகுப்பதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. “அரசு, நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளதால், இது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்ட விஷயம் அல்ல” என்று கூறிய மத்திய அரசு, “அரசியல் ஆதாயம் கருதிதான் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக நீதிமன்றம் எப்படி முடிவுக்கு வந்தது?” என்றும் கேள்வி எழுப்பியது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுத் ரோஹத்கி, “சில விஷயங்களை அரசின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும். இவையெல்லாம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டவை. இந்த விளம்பரங்கள் மூலமே அரசு தனது கொள்கை மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக மக்களுடன் தொடர்புகொள்கிறது” என்றார்.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு விளம்பரங்களின் உள்ளடக்கம் மற்றும் செலவை நெறிப்படுத்தும் வகையில், கல்வியாளர் என்.ஆர்.மாதவ மேனன் தலைமையிலான குழு அளித்திருந்த அனைத்து முக்கிய பரிந்துரைகளையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட எவரது படமும் இடம்பெறக் கூடாது என்ற பரிந்து ரையை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனினும் அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டும் பயன்படுத்த எவ்வித தடையும் இல்லை என நீதிபதிகள் தெரி வித்தனர்.

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.

மேலும் அரசு விளம்பரங்களை நெறிப்படுத்தவும் வழிகாட்டு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கவும் 3 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x