Published : 29 May 2015 09:47 AM
Last Updated : 29 May 2015 09:47 AM
டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 70 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, பொது இடங்களில் இலவச வைஃபை வசதி.
ஆட்சிப்பொறுப்பேற்ற பின், இலவச வைஃபை வசதியில் ஃபேஸ்புக், மின்னஞ்சல், யூடியூப், வாட்ஸ்ஆப் போன்றவைகளை காண முடியாது எனவும், அரசு மற்றும் அரசு சார்ந்த இணைய தளங்களை மட்டுமே காண முடியும் என்றும் கூறப்பட்டது. இந் நிலையில், தற்போது குறிப்பிட்ட அளவு இலவச பயன்பாடு என இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி அதிகாரிகளின் வட்டாரம் கூறியதாவது:
512 கேபிபிஎஸ் வேகத்திறனில் நாள் ஒன்றுக்கு 50 எம்பி அளவில் இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும். இதுதொடர்பான இறுதி முடிவு இன்னும் சில நாட்களுக்குள் எடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமல்படுத்தப்படும். இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு, ‘ரவுட்டர்’ அமைப்பது உட்பட அதற்கானப் பணிகள் துவக்கப்படும்.
இதற்காக உலகின் 150 இணையதள நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய முடிவின்படி, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவை இலவசமாகவும், வீடியோ சாட் மற்றும் பதிவிறக்கத்திற்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் முதல் கட்டமாக, நகரின் சுமார் 1000 பொது இடங்கள் அடையாளம் காணப்பட உள்ளன. முன்னதாக இந்த துறையின் சார்பில் ஒரு குழு பார்சிலோனா (ஸ்பெயின்), ஷாங்காய் (சீனா), ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்) மற்றும் சிங்கப்பூர் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளது.
தற்போது, ஷாங்காயில் ஒரே சமயத்தில் சுமார் 4.50 லட்சம் பேர் இணையதள வசதியை பெறும் பெரிய நகரமாக உள்ளது. டெல்லியின் பொது இடங்களில் அமைக்கப்படவிருக்கும் இணையதள வசதியில், ஒரே சமயத்தில் சுமார் இரண்டு கோடி பேர் பயன்படுத்த முடியும்.
டெல்லி மாநிலம் முழுவதும் சுமார் 80,000 பொது இடங்களில் இணையதள வசதி செய்யப்பட உள்ளது. இதனால், விளம்பரங்கள் வழியாக வருவாய் கிடைக்கும் என்று டெல்லி அரசு எதிர்பார்க்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT