Last Updated : 27 May, 2015 12:59 PM

 

Published : 27 May 2015 12:59 PM
Last Updated : 27 May 2015 12:59 PM

முஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்

முஸ்லிம் என்பதால் மட்டுமே 25 வயது இளம்பெண்ணுக்கு மும்பையின் பல பகுதிகளில் தேடியும் வாடகைக்கு ஒரு வீடு கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மிஸ்பா கத்ரி (25), குஜராத்தில் வளர்ந்தவர். 2002 கோத்ரா சம்பவத்துக்குப் பிந்தைய கலவரத்தை கண் முன்னே கண்டவர். குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கு நேரும் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்டவர்.

பணி நிமித்தமாக அண்மையில் மும்பைக்கு இடம் பெயர்ந்த மிஸ்பா தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மும்பையில் வசிக்க வீடு தேடியபோது நேர்ந்த அனுபவங்கள்தான் அவை.

முஸ்லிம் என்பதால் மும்பை சமூகம் தன்னை எவ்வாறு ஒதுக்கியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "நான் மும்பைக்கு வந்தபோது காஸ்மோபாலிடன் நகரத்தில் எனக்குரிய மரியாதை கிடைக்கும் என்றே நினைத்தேன். ஆனால், இன்று வசிப்பதற்கு ஒரு வீடு கிடைக்காதததால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கதவுகளை தட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

வீடு தேடி பல நாட்களாக அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது மும்பை வதாலா பகுதியில் சாங்வி ஹைட்ஸ் எனுமிடத்தில் 3 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீடு கிடைத்தது. அந்த பிளாட்டில் ஏற்கெனவே தங்கியிருந்த இருவரும் ஃபேஸ்புக் மூலம் என்னைத் தொடர்பு கொண்டனர்.

நானும் அவர்களை நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் இருவரும் இந்துக்களே. இருவரும் வேலை பார்க்கின்றனர். அந்த பிளாட்டை என்னுடன் பகிர்ந்து கொள்ள சம்மதித்தனர். வீடு கிடைத்தவிட்ட திருப்தியில் இருந்தேன்.

அந்த பிளாட்டுக்கு குடிபெயர்வதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, அந்த குடியிருப்பின் இடைத்தரகர் என்னைத் தொடர்பு கொண்டு அந்த குடியிருப்பின் சட்டத்திட்டங்களின்படி முஸ்லிம்களை வாடகைதாரர்களாக ஏற்றுக்கொள்வதில்லை என்றார்.

மேலும், அதையும் மீறி அந்த பிளாட்டுக்கு குடிவர விரும்பினால் அங்குள்ளவர்களால் ஏதாவது மனக்கசப்புக்கு ஆளாக்கப்பட்டால் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, அத்தகைய நிகழ்வுகளுக்கு கட்டிட உரிமையாளரோ, இடைத்தரகரோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்ற ரீதியில் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார். மேலும், எனது முழு விவரங்கள் அடங்கிய பயோ டேட்டாவையும் வழங்குமாறு கூறினார்.

இந்த விதிகளை ஏற்க மறுத்துவிட்டேன். மேலும், நான் இதற்கு முன்பு இருந்த வீட்டின் ஒப்பந்தம் முடிவதால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நாளில் புது வீட்டில் குடிபெயர்ந்தேன். குடிபுகுந்துவிட்டால் நிலைமை சரியாகிவிடும் என நம்பினேன்.

ஆனால், ஒருவார காலத்துக்குப் பின்னர் அந்த நபர் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார். எதிர்ப்பை மீறியும் குடி பெயர்ந்ததால் போலீஸில் புகார் அளித்து என்னை அப்புறப்படுத்துவதாக மிரட்டினார். குடியிருப்பின் கட்டுமான நிறுவனத்தை அணுகியபோது, முஸ்லிம்களுக்கு வீடு தருவதில்லை என்பது எங்களது கொள்கை என்று மட்டும் கூறினர். அதன்பின், பிளாட்டை காலி செய்ய எனக்கு கெடு நிர்ணயிக்கப்பட்டது. நானும் காலி செய்தேன். என்னை தங்களது பிளாட்டில் அனுமதித்ததற்காக அங்கிருந்த 2 பெண்களும் வீட்டை காலி செய்ய நேர்ந்தது" என்று மிஸ்பா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x