Last Updated : 27 May, 2015 08:21 AM

 

Published : 27 May 2015 08:21 AM
Last Updated : 27 May 2015 08:21 AM

பார்சல் குண்டு வெடித்து கட்சி தலைவரின் பாதுகாவலர் பலி

பிஹாரில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மாவட்ட தலைவர் வீட்டுக்கு பார்சலில் அனுப்பப்பட்ட குண்டு வெடித்து பாதுகாவலர் பலியானார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கயா மாவட்ட தலைவர் அபய் குஷ்வாகா. இவரது வீட்டுக்கு பார்சல் ஒன்று கூரியரில் வந்தது. அதில் இருந்து இரு வயர்கள் வெளியே தெரியும்படி இருந்துள்ளன.

அபயின் பாதுகாவலர் சந்தோஷ் குமார் (24) அபயின் உறவினர் ஜெய்ஹிந்த் ஆகியோர் அந்த வயரை பார்சலுக்குள் திணிக்க முயன்றனர். அப்போது அந்த பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் பாதுகாவலர் சந்தோஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அபயின் உறவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தோஷ் குமாரை தனது தனிப்பட்ட பாதுகாவலராக அபய் பணியில் வைத்திருந்தார்.

இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பார்சலை அனுப்பியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது மாவோயிஸ்ட்களின் சதிவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது. அபய் குஷ்வாகாவை குறிவைத்து இந்த வெடிகுண்டு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அவர் அதனை திறக்காததால் உயிர் தப்பினார்.

இது குறித்து கயா மாவட்ட காவல் துறை தலைவர் மனு மகாராஜ் கூறியது: குஜாட்டி கிராமத்தில் உள்ள அபய் குஷ்வாகாவின் வீட்டு முகவரிக்கு அந்த வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வயர்கள் வெளியே தெரிந்ததால் அதனை உள்ள நுழைக்க முயற்சித்தபோது வெடித்துள்ளது. அது சக்தி குறைந்த வெடிகுண்டுதான். கையில் வைத்திருந்தபோது வெடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது மாவோயிஸ்ட்களின் சதி வேலையா அல்லது தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடந்த சம்பவமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x