Published : 17 May 2015 07:01 PM
Last Updated : 17 May 2015 07:01 PM
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, முன் எப்போதும் இல்லாத வகையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறப்பாக செயலாற்றியது உத்வேகம் அளிப்பதாக, அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து மூன்றாவது முறை உறுப்பினராக இருப்பவர் ராகுல். இவர் முதன் முறையாக அரசியலில் குதித்தவர், 2004 ஆம் ஆண்டு உ.பி.யின் அமேதி தொகுதியில் வென்றார். பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மக்களவையின் விவாதங்களில் மட்டும் கலந்து கொண்ட ராகுல், கடந்த மார்ச் 21, 2005-ல் கரும்பு விவசாயிகளின் பிரச்சனை மீது பேசினார்.
அப்போது, கலாவதியின் ஏழை குடும்பம் பற்றி குறிப்பிட்டது இன்றுவரை சர்ச்சையாக உள்ளது. ஜூலை 22, 2008-ல் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் மீது, டிசம்பர் 18, 2013-ல் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க சட்டப்படியாக ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
எனினும், மக்களவையில் ராகுல் ஒரு கேள்வி கூடக் கேட்டது கிடையாது. அதேபோல், பூஜ்ஜிய நேரங்களிலும் மக்களவையில் ஒருமுறை கூட பேசியது இல்லை, விவாதங்களிலும் குறுக்கீடுகள் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால், 16 ஆவது மக்களவையின் இருபகுதிகளில் நடந்து முடிந்த 4 ஆவது கூட்டத்தொடரில் ஐந்து உறுதியான குறுக்கீடுகள் செய்ததுடன், தம் தாயும் கட்சித் தலைவியான சோனியா காந்தியையும் மிஞ்சும் அளவிற்கு பூஜ்ஜிய நேரத்திலும் பிரச்சனைகளை எழுப்பியுள்ளார்.
சுமார் 57 நாட்கள் 'காணாமல்' போய் திரும்பிய பின் ராகுல், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மக்களவையில் விவசாயிகள் பிரச்சனையை எழுப்பியவர், அதன் இருநாட்களுக்கு பின் இணையதள சமத்துவம் பிரச்சனையையும் கிளப்பினார். பிறகு, ஏப்ரல் 29-ல் கோதுமை விற்பனை மற்றும் கொள்முதலில் நிலவும் பிரச்சனைகளையும் மக்களவையின் முன் வைத்தார். மே 7-ல், கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை பிரதமர் நரேந்தர மோடி அரசு ரத்து செய்ய முயல்வதாக புகார் கூறினார். இதில், முதன்முறையாக தம் தொகுதியின் பிரச்சனையையும் எழுப்பும் வகையில் அதன் உணவுப் பூங்கா திட்டம் குறித்து எடுத்துரைத்ததும், கடைசியாக நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் 'கோட் சூட்' போட்ட அரசு என கடும் விமர்சனம் செய்ததும் ஆளும் கட்சியினரை அதிர வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து 'தி இந்து'விடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பிக்கள் கூறும்போது, 'இந்த முறை மக்களவைக்கு 23 நாட்கள் வருகை தந்த ராகுலின் செயல்பாடுகள் முற்றிலும் பெரிய மாற்றம் இருந்தது. அவர் எழுப்பிய பிரச்சனைகளுக்கு மற்ற எதிர்கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை பல்வேறு சமயங்களில் ஆதரவு குரல் கொடுத்தனர். இது அவரை எதிர்கட்சி தலைவர்களில் ஒருவராக அங்கீகரித்திருப்பதை காட்டுகிறது. இந்த பாணியை ராகுல் தொடர்ந்தால் அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அமர்த்துவதில் எந்த சிக்கலும் இருக்காது' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுலின் செயல்பாடுகளில் தீவிரம் இருந்ததை உணர்ந்த பாஜக தலைவர்கள், அதற்கு கடிவாளம் அமைக்கவும் முயன்றனர். மே7-ல் அமேதியின் உணவுப் பூங்கா பிரச்சனையை ராகுல் கிளப்பிய போது பதில் தர வேண்டி, ஐந்திற்கும் அதிகமான அமைச்சர்கள் எழுந்தனர். ஆனால், அனைவரையும் அமர வைத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதற்கான பதிலை ராகுலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பிரச்சனையை முடிக்க முயன்றார். ஆனால், இதே பிரச்சனையை காங்கிரஸார் தொடர்ந்து மூன்று நாட்களாக எழுப்பி மக்களவையை செயல்பட விடாமல் முடக்கியதால், அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்று விட்டதாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT