Published : 06 May 2015 08:56 PM
Last Updated : 06 May 2015 08:56 PM
இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ஹெல்மெட்டை சரியாக அணியாமல் பயணம் செய்த டெல்லி காவல்துறையின் போக்குவரத்து காவலர் வீடியோவில் சிக்கினார். சீருடையில் இருந்தவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை பொதுமக்கள் வரிசையில் நின்று செலுத்தினார்.
டெல்லியின் இருதயப்பகுதியான கன்னாட் பிளேஸ் சாலையில் நின்றபடி நேற்று முன் தினம் மாலை அதன் போக்குவரத்து சிறப்பு துணை ஆணையர் முகேஷ் சந்தர் பணியில் மூழ்கியிருந்தார். அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்தபடி டெல்லி போக்குவரத்து காவலர் தனது ஹெல்மெட்டை சரியாக அணியாமல், பெயரளவில் கழுத்தில் மாட்டியபடி சென்று கொண்டிருந்தார்.
இதை உடனடியாக தனது வீடியோவில் படம் பிடித்த சந்தர். உடனடியாக அந்த காவலரை அழைத்து விசாரணை நடத்தினர். இதில், தனது தவறை ஏற்க மறுத்தவரிடம் வீடியோவின் பதிவுகள் காட்டப்பட்டன. இதனால், வேறு வழியின்றி தம் தவறை ஒத்துக் கொண்டவருக்கு ரூபாய் 100 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அதுவும், சம்மந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகத்தில் சாதாரண பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது அபராதத் தொகையை செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனால், துணை ஆணையரின் உத்தரவின்படி பொதுமக்களுடன் சீருடை அணிந்தபடி தனது அபராதத்தை அந்தக் காவலர் செலுத்த வேண்டியதாயிற்று.
இது குறித்து போக்குவரத்தின் சிறப்பு துணை ஆணையரான முகேஷ் கூறுகையில், ‘போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களிடம் கூறுவதை போல், நாமும் அதை பின்பற்ற வேண்டும். இதில் சட்டத்தை மீறும் காவல்துறையினரும், பொதுமக்களை போல் வரிசையில் நின்று அபராதம் கட்டுவது தான் சரியானது. போக்குவரத்தை மீறுபவர்கள் காவலர்கள் உட்பட யாராக இருப்பினும் அவர்களின் வீடியோ ஆதாரத்துடன் எங்களிடம் புகார் அளித்தால், நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என உறுதி கூறுகிறார்.
இதுபோல், டெல்லியின் காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை மீறி சிக்குவது முதன்முறை அல்ல. இவர்கள் மீது, நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகை போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் டெல்லியின் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளன. இந்த காரணங்களுக்காக அவர்களிடம் முப்பதிற்கும் மேற்பட்டக் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் தம் வாகனங்களில் சீட் பெல்ட்டுகள் இன்றி ஓட்டியதாக அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியதாக, தடை செய்யப்பட்ட பாதைகளில் வாகனங்கள் செலுத்தியதாக, அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமாக அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டியதாகவும் டெல்லியின் பல காவல்துறையினர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT