Published : 24 May 2014 10:00 AM
Last Updated : 24 May 2014 10:00 AM

திருப்பதியிலிருந்து கடல் தாண்டும் செம்மரங்கள்- ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் ஓங்கி வளர்ந்துள்ள செம்மரங்களை வெட்டி, பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திற்கு கடல் தாண்டி கடத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போலீஸ், வனத்துறையினர் முயன்றும் கடத்தலைத் தடுக்க முடியவில்லை.

செம்மரங்கள் சாதாரணமாக அதிக உஷ்ணத்திலும், அதிக குளிர் பிரதேசத்திலும் வளரக்கூடிய தன்மை கொண்டதாகும். இவ்விரு சீதோஷ்ணமும் ஒருசேர சேஷாசலம் வனப்பகுதியில் உள்ளதால், இம்மரங்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. சேஷாசலம் வனப்பகுதி சுமார் 190 கி.மீ நீளம் கொண்ட மலைப்பிரதேசமாகும்.

தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கூலி ஆட்கள் இந்த மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவர்கள் சந்தேகம் ஏற்படாத வகையில் பக்தர்களைப்போன்று, ரயில், பஸ்களில் திருப்பதியில் உள்ள வாரி மெட்டு என்கிற இடத்தில் வந்து சேருகின்றனர்.

மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றுடன் வரும் இவர்கள், வனப்பகுதிக்குள் சென்று மரங்களை வெட்டி அதனை கடத்தும் லாரிகளில் ஏற்றும்வரை ஓய மாட்டார்கள்.

மரத்தை வெட்டி அதிலுள்ள மரப்பட்டைகளை நீக்கி சுத்தம் செய்து அதனை 4 அல்லது 5 அடி துண்டுகளாக வெட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு, கிலோ கணக்கில் கணிசமான கூலி வழங்கப்படுகிறது.

மேலும் ஒருவேளை இவர்கள் போலிஸில் சிக்கிக் கொண்டால், அவர்களை ஜாமீனிலும் எடுக்க வேண்டும். செம்மரங்களை வெட்டினால், மற்ற மரங்களைப் போன்றுதான் ஜாமீன் பெறக்கூடிய தண்டனை என்பதால், துணிந்து இந்த தொழிலில் அதிகமானோர் ஈடுபடுகின்றனர்.

செம்மரங்கள் ஏற்றுமதி

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியிலிருந்து கடத்தப்படும் செம்மரங்கள் சென்னை, மங்களூர் துறைமுகங்கள் வழியாக ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. குறிப்பாக இம்மரங்களுக்கு ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கிராக்கி அதிகமாக உள்ளது. ஆண்மையை அதிகரிக்கும் வயாகரா போன்ற மருந்துகள் இதன் மூலம் தயாரிக் கப்படுவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் இம்மரங்கள் மிகவும் வலுவா

னவை. பல தலைமுறை களுக்கு தாங்கும் சக்தி படைத்தவை. இதைதவிர, இதனை எந்த வடிவிலும் இழைக்கலாம் என்ப தால், மரப்பொருட்கள், பொம்மைகள், சிலைகள் போன்றவற்றை இதன் மூலம் தயாரிக்கின்றனர்.

ஒரு டன் ரூ.15 லட்சம்

இங்கு, ஒரு கிலோ செம்மரம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையிலும் டன் ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது. இதுவே வெளிநாடுகளில் 10 மடங்கு அதிகமாக கைமாறுகிறது.தற்போது, ஆந்திர மாநிலத்தில் மட்டும் கடத்தும்போது பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள் 11,000 டன் கையிருப்பில் உள்ளன. இதனை டெண்டர் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.

இதனை வாங்கவும் வெளிநாட்டவரிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதன் மூலம் ஆந்திர அரசுக்கு சுமார் ரூ.500 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் செம்மரங்கள் கடத்து வதைத் தடுக்க டாஸ்க் ஃபோர்ஸ் போலீஸார், வனத் துறையினர், தீவிர வாகன சோதனைகள் நடத்தி மரங்களை கடத்தல் கும்பலிடமிருந்து மீட்பதோடு, அதில் ஈடுபடுபவர்களையும் கைது செய்து வருகின்றனர். ஆனால், இந்த கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

எய்தவர்களை பிடிக்காமல், அம்புகளை மட்டும் பிடித்து என்ன பயன்? ஆதலால், இனியாவது, துறையிலேயே உள்ள சிலர் நேர்மையாக நடந்து கொள்வது மட்டுமின்றி, வனத்துறை சட்டங் களை கடுமையாக்கி, வனப் பாதுகாவலர்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கொடுத் தால் மட்டுமே இந்த கடத்தலை முற்றிலுமாக தடுத்து, இதுபோன்ற அரிய வகை மரங்களைக் காப்பாற்ற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x