Published : 29 May 2015 09:52 AM
Last Updated : 29 May 2015 09:52 AM
சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மீதான மர்மங்களுக்கு விடை காணும் வகையில் மீண்டும் ஒரு தேடுதல் இயக்கத்தை பொதுமக்களும், நேதாஜியின் அபிமானிகளும் வரும் ஜூன் 5 -ம் தேதி தொடங்க உள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டையை நேதாஜியின் கொள்ளுப் பேத்தியான ராஜ்யஸ்ரீ சௌத்ரி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கி வைக்கிறார்.
இந்த தேடுதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவாத்ஸவா `தி இந்து’விடம் கூறியதாவது:
நேதாஜி தொடர்பான மர்மங் களுக்கு விடைகாண்பதற்காக பொதுமக்களுடன் இணைந்து தேடுதல் வேட்டை நடக்கும்.
இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு, ஓய்வு பெற்ற மத்திய தகவல் ஆணையர் ஓ.பி.கேஜ்ரிவால், நேதாஜியின் நம்பிக்கைக்குரியவரும், அவரிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய வருமான நிஜாமுதீன் உள்ளிட்ட ஐந்து பேர் வழிகாட்டிகளாக இருப்பார்கள். இந்த தேடுதல் வேட்டையில் கலந்து கொள்ளும்படி நேதாஜியின் அபிமானிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த ஆகஸ்ட் 18, 1945-ல் நேதாஜி கடைசியாகப் பயணம் செய்த விமானம் தைவானில் விபத்துக்குள்ளானது. அதில் தீக் காயம் அடைந்த நேதாஜி அருகிலுள்ள ஜப்பான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த விட்ட தாகக் கூறப்படுகிறது. ஆனால், இதனை நேதாஜியின் குடும்பத்தினர் நம்பவில்லை.
நேதாஜியின் மர்மம் தொடர்பாக மத்திய அரசு ஷா நவாஸ் விசாரணைக் குழு, கோஸ்லா விசாரணைக் குழு மற்றும் முகர்ஜி விசாரணைக் குழு ஆகியன அமைக்கப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை.
எனவே, `சுபாஷ் கி கோஜ், ஏக் மஹா அபியான்’ என்ற பெயரில் நேதாஜியின் அபிமானிகளால் புதிதாக ஒரு தேடுதல் வேட்டை வரும் ஜூன் 5-ல் தொடங்க இருக்கிறது.
இந்த தேடுதல் வேட்டையானது, நாட்டின் பல முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டம், கருத்தரங்குகள் மற்றும் விவாதக் களங்கள் வடிவில் நடைபெற உள்ளது. அப்போது, நேதாஜியின் பழைய ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கண்காட்சிகளும் நடத்த திட்ட மிட்டப்பட்டுள்ளது.
கும்நாமி பாபா
தேடுதல் வேட்டை குறித்த ஆலோசனை கூட்டம் சமீபத்தில் வாரணாசியில் உள்ள காசி வித்யா பீடத்தின் காந்தி அதித்யாயன் பீடத்தில் நடைபெற்றது.
இதில், இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரி யர்கள், சமூக சேவை அமைப்புகள் மற்றும் பொதுநலவாதிகள் பலரும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். அதில், அயோத்தியில் `கும்நாமி பாபா’ எனும் பெயரில் வாழ்ந்து மறைந்தவர்தான் நேதாஜி என்பது தொடர்பான மர்மங்களுக்கும் விடைகாணப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கும்நாமி பாபா தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேதாஜியின் மகளான லலிதா போஸ் மற்றும் மூத்த மகனான சுரேஷ் சந்திர போஸ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், `கும்நாமி பாபாவின் உடைமைகளை பாதுகாத்து வைத்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்’ என உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. எனினும் இதுவரை விசாரணைக்குழு அமைக்கப்பட வில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT