Published : 11 Mar 2014 09:40 AM
Last Updated : 11 Mar 2014 09:40 AM
ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தொடங்கவுள்ள புதிய கட்சியின் பெயர் 'ஜெய் சமைக்ய ஆந்திரா' என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில பிரிவினையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதோடு, முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ஹைதராபாத்தில் செய்தியாளர்களை கிரண்குமார் சந்தித்தார். அப்போது, தான் தொடங்கப்போகும் கட்சியின் பெயர் 'ஜெய் சமைக்ய ஆந்திரா' ('ஜெய் ஒருங்கிணைந்த ஆந்திரா') என அறிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் “தெலுங்கர்களின் ஆத்ம கவுரவத்தை நிலைநாட்டவே கட்சி தொடங்கப்படுகிறது. ஜெர்மனி போன்ற நாடே பிரிவினைக்கு பின்னர் ஒன்றுபட்டுள்ளது.
அதே போன்று ஆந்திர மாநிலமும் ஒன்றுபடும். இம்முறை மாநில ஒற்றுமை போராட்டமும் தெலங்கானாவில் இருந்துதான் தொடங்கும். ஜெய் சமைக்ய ஆந்திரா கட்சி, அரசியலில் புதிய அத்தியாயம் படைக்கும்.
இக்கட்சி மக்கள் விரும்பும் கட்சியாக செயல்படும். மக்கள் சேவை செய்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். எங்கள் கட்சியில் சேர தெலங்கானா பகுதியில் இருந்தும் பலர் ஆவலுடன் உள்ளனர். மாநில பிரிவினைக்கு சந்திரபாபு நாயுடுவே காரணம். கட்சிக் கொடி மற்றும் கொள்கை விவரங்கள் வரும் 12ம் தேதி (நாளை) ராஜமுந்திரியில் நடைபெறும் முதல் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும்” என்றார். கட்சியின் செயற்குழு நிர்வாகிகளின் பெயர்களையும் அவர் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT