Published : 22 May 2015 07:18 AM
Last Updated : 22 May 2015 07:18 AM

துப்பாக்கி முனையில் ஏடிஎம்-மில் பெண்ணிடம் கொள்ளை அடித்தவர் கைது

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் ஏடிஎம்-மில் துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணிடம் நகை, பணம் கொள்ளையடித்த நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஹைதராபாத் யூசஃப்கூடா பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-மில் ஸ்ரீலதா என்பவர் நேற்று முன்தினம் காலை பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏடிஎம்மில் இருந்த மர்ம நபர் ஒருவர் ஸ்ரீலதாவிடம் திடீரென துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்.அதிர்ச்சியடைந்த ஸ்ரீலதா மர்ம நபருக்கு பயந்து நகை, பணத்தை அவரிடம் கொடுத்தார். பின்னர் மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து ஹைதராபாத் எஸ்.ஆர். நகர் போலீஸில் ஸ்ரீலதா புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபரைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்தனர்.

இதனிடையே,இந்த சம்பவம் நடந்த ஏடிஎம் அறையிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர் முகத்தில் கைகுட்டை கட்டி இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திலிருந்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் அந்த மர்ம நபரை ஹைதராபாத் போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர்.

அந்த நபர் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளை சம்பவத்தின்போது அவர் பயன்படுத்திய துப்பாக்கி யையும், 3 தோட்டாக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த நபர் வேறு எங்காவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x