Published : 22 May 2015 07:22 AM
Last Updated : 22 May 2015 07:22 AM
மக்களவை முன்னாள் உறுப்பின ரும் திரைப்பட நடிகையுமான ஜெயப்பிரதாவை, உ.பி. மேலவை உறுப்பினராக அமர்சிங் முயல்வதாகக் கூறப்படுகிறது.
உ.பி.யின் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமர்சிங் (59). இவர் அக்கட்சியில் இருந்தபோது, தனது நெருங்கிய சகாவான நடிகை ஜெயப்பிரதாவையும் தனது கட்சியில் சேர்த்து உ.பி.யின் ராம்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வைத்தார். ராம்பூர் எம்.பி.யாக தொடர்ந்து 2 முறை பதவி வகித்த ஜெயப்பிரதா, சமாஜ் வாதி கட்சியில் இருந்து அமர்சிங் விலகியபோது அவருடன் வெளியேறினார்.
தற்போது ஜெயப்பிரதாவை உ.பி.யின் மேலவை உறுப்பின ராக்க அமர்சிங் முயல்வதாக கூறப் படுகிறது. உ.பி. மேலவையின் நியமன பிரிவுகளின் கீழ் 9 உறுப்பினர்களுக்கான காலியிடம் வரும் மே 25-ம் தேதிக்குள் நிரப்பவேண்டி உள்ளது. இதில் கலை மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் ஜெயப்பிரதாவை மேலவை உறுப்பினராக்கும் முயற்சியில் அமர்சிங் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “இதற்காக முலாயம் சிங்கை அமர்சிங் ரகசியமாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். இவர் முதலில் தனக்கு நெருக்கமானவரான ஜெயப்பிரதாவை மேலவையில் புகுத்தி விட்டு, பிறகு அவர் மூலமாக மெல்ல கட்சியில் நுழைய முயல்கிறார்” என்றனர்.
உ.பி.யின் ராம்பூரில் 2009 மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் அமர்சிங் மீண்டும் போட்டியிட முயலும்போது, அக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஆசம்கானுடன் மோதல் ஏற்பட்டது. இதனால், கடந்த 2010-ல் சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவானபோது, கட்சியில் இருந்து வெளியேறினார் அமர்சிங். இதற்கு ஆசம்கானே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT