Published : 05 May 2015 08:51 AM
Last Updated : 05 May 2015 08:51 AM
தேசிய மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988-க்கு மாற்றாக உருவாக் கப்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவில் மிகக் கடுமையான விதிமுறைகள் உள்ளன.
இதனால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதில் இருந்து மத்திய அரசு பின் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சட்டத்தின்படி, குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை அளிக்கப்படும். இவர்களின் ஓட்டுநர் உரிமமும் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். இதே தவறை ஒருவர் 3 ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக செய்யும்போது ரூ. 50,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையுடன், ஓர் ஆண்டுக்கு ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். மூன்றாவது முறையாக செய்தால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், வாகனத்தை 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யவும் முடியும்.
அன்றாடம் நடைபெறும் சாதாரண போக்குவரத்து விதிமீறல் களுக்கும் கடும் அபராதங்களும், தண்டனைகளும் இந்த மசோதா வில் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சிவப்பு விளக்கை கடந்து செல்வது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களுக்கு முதல் முறைக்கு ரூ. 2,500 இரண்டாவது முறைக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும்.
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால், முதல்முறை ரூ.4,000, இரண்டாவது முறை ரூ.6,000, மூன்றாவது முறை ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இத்துடன் ஓட்டுநர் உரிமம் ஒரு மாத காலத்துக்கு ரத்து செய்யப் படும். கட்டாய சிறப்பு பயிற்சி பெற்ற பிறகே இவர்கள் மீண்டும் உரிமம் பெற முடியும்.
வாகனம் மோதி குழந்தை இறந்தால், வாகன ஓட்டுநருக்கு ரூ. 3 லட்சம் அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும். இதில் பெரியவர்கள் இறந்தால், 1 லட்சம் அபராதமும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும். விலங்குகள் இறந்தால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 4 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் ஓட்டுநருக்கு கிடைக்கும்.
புதிய வாகனங்களை பதிவு செய்யாமல் ஓட்டினால் முதல் முறைக்கு ரூ. 25,000, இரண்டாவது முறைக்கு ரூ. 50,000 அபராதமாக விதிக்கப்படும். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது இனி நாடு முழுவதும் கட்டாயம் ஆகும். ஓட்டுநர் மட்டுமின்றி அவருடன் பயணம் செய்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனங்களுக்கு ஏற்றபடி அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறுவோருக்கு அபராதம் உண்டு.
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அவர்களின் தவறு களுக்கு ஏற்றபடி புள்ளிகள் குறிக்கப்படும். இந்த புள்ளிகள் 12 ஐ எட்டினால் அவர்கள் ஓட்டுநர் உரிமம் ஓர் ஆண்டுக்கு ரத்து செய்யப்படும். 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை காரின் முன் இருக்கைகளில் பயணம் செய்ய வைக்கக் கூடாது. அதற்கு மேலான வயதுள்ளவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்.
இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, லாரி, மினி லாரி, டிரெய்லர் என எதுவாக இருப்பினும் அதனை தேசியக் குழு ஆராய்ந்து, பாதுகாப்பானது என சான்றிதழ் வழங்கும். இந்த சான்றிதழ் பெற்ற வாகனங்களில் சிறு மாற்றங்கள் செய்தாலும், மீண்டும் தேசியக் குழுவிடம் சான்றிதழ் பெறவேண்டும்.
வாகனங்களில் குறைபாடுகள் உள்ளதாக தெரிந்தால், உற்பத்தி யாளரே உடனடியாக அந்தக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட வகை வாகனத்தில் ஒரேவித குறைபாடு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்தால், அந்த வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த தேசியக் குழு உத்தரவிட முடியும்.
இந்த தேசியக் குழுவின் தலை யீட்டால் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதனால் பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பெரும்பாலான மாநிலங்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சில நல்ல அம்சங்களும் கொண்ட இந்த விதிமுறைகள் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய முன்னேறிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டாலும், அதற்கு ஏற்ற சூழல் நம் நாட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த புதிய சட்டத்தால் போக்குவரத்து காவல் துறையில் லஞ்சம் அதிகமாகும் எனவும், குறிப்பிட்ட சில வாகனங் களை தயாரிக்கும் பெரு நிறுவனங் களுக்கு லாபமாக அமையும் என்றும் புகார் கூறப்படு கிறது.
மேலும், இந்த சட்டத்தால் வாடகை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் அதிகமாகப் பாதிக்கப் படுவதுடன், கடும் விதிமுறைகளால் நாடு முழுவதும் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு வாய்ப்பாகி விடும் எனக் கூறப்படுகிறது.
இந்தக் கருத்துகளை வலியுறுத் தும் வகையில், கடந்த ஏப்ரல் 29-ல் நாடு முழுவதும் நடந்த போராட்டத்தால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மே 8-ல் முடிவடையும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்து வதில் இருந்து மத்திய அரசு பின்வாங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT