Published : 17 May 2015 12:19 PM
Last Updated : 17 May 2015 12:19 PM
அதிநவீன வசதியுடன் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பல்பொருள் கண்டுபிடிப்பு ராடாரை (எம்ஓடிஆர்) அடுத்த மாதம் பரிசோதித்துப் பார்க்க இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்த ராடார் ராக்கெட்களை பாதுகாப்பாக விண்ணில் செலுத்த உதவும்.
இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குநர் எம்ஒய்எஸ் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சதீஷ் தவான் விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள எம்ஓடிஆர், அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி ராக்கெட்டில் வைத்து பரிசோதித்துப் பார்க்கப்படும். இது அடுத்த மூன்று மாதங்களுக்குள் முறைப்படி செயல்பாட்டுக்கு வரும். ராக்கெட்டை விண்ணில் செலுத்தும்போது பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ராடார் பயன்படுத்தப்படும். விண்ணிலிருந்து வரும் எரிகற்கள் போன்ற தேவையற்ற பொருட்களைக் கண்டறிந்து அதுபற்றி தகவல் அளிக்கும். இப்போது, இத்தகைய தகவலை நாசாவிடமிருந்து நாம் பெற்று வருகிறோம்.
ரூ.245 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராடார் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு சிறந்த உதாரணம் ஆகும். பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் இதுபோன்ற ராடாரின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.800 கோடி ஆகும்.
இந்த திட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 2015 பிப்ரவரி மாதத்துக்குள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை எட்டிவிட்டோம். இதுபோன்ற அதிநவீன ராடாரை தயாரிப்பதற்கான திறன் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். 35 டன் எடை, 12 மீட்டர் நீளம் 8 மீட்டர் உயரத்துடன் செவ்வக வடிவிலான இந்த ராடார் பல்வேறு திசைகளில் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராடார் ஒரே நேரத்தில் 10 பொருட்களைக் கண்டறியும் திறன் கொண்டது. ஒரு 30 செ.மீ.க்கு 30 செ.மீ. அளவுடைய ஒரு குறிப்பிட்ட பொருளை 800 கி.மீ. தொலைவில் இருந்தாலும் கண்டுபிடித்துவிடும். அதே பொருள் 50 செ.மீ.க்கு 50 செ.மீ. அளவுடன் இருந்தால் 1,000 கி.மீ.க்கு அப்பால் இருந்தாலும் கண்டுபிடித்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT