Published : 25 May 2015 11:27 AM
Last Updated : 25 May 2015 11:27 AM
பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் என்றால் அலர்ஜி என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது, “டெல்லி அரசை நடத்த மத்திய அரசு விரும்புகிறது. எங்களின் செயல்திட்டத்தை அவர்கள் அச்சுறுத்தி முடக்க விரும்புகின்றனர். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கேஜ்ரிவால் என்றாலே மத்திய அரசுக்கு அலர்ஜி” என்றார்.
டெல்லி தலைமைச் செயலாளர் (பொறுப்பு) பதவிக்கு சகுந்தலா காம்ளின் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் – ஆளுநர் நஜீப் ஜங் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சில துறைகளில் ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிக்கை குறித்து விவாதிப்பதற்காக டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தை செவ்வாய்க்கிழமை (நாளை) முதல் 2 நாட்களுக்கு ஆம் ஆத்மி அரசு கூட்டவுள்ளது. இதுகுறித்து மணீஷ் சிசோடியா கூறும்போது, “சச்சரவுகளை கண்டு நாங்கள் அச்சப்பட மாட்டோம். ‘ஊழல் இல்லாத டெல்லி’ என்ற எங்கள் நோக்கத்தை முடக்க முயலும் யாரையும் எதிர்த்து போரிடுவோம். எங்களை கேள்வி கேளுங்கள். விமர்சனம் செய்யுங்கள். நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களை தூக்கில் இடுங்கள். ஆனால் புரளி கிளப்பாதீர்கள்” என்றார்.
இதனிடையே டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறும்போது, “ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருப்பதாக கூறும் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை அரசியல் சட்ட விரோதமானது” என்றார்.
மற்றொரு எம்எல்ஏ அல்கா லம்பா கூறும்போது, “அதிகாரிகளை நியமிக்க அல்லது இடைநீக்கம் செய்ய டெல்லி முதல்வருக்கு அதிகாரம் இல்லையென்றால், ஊழல் அதிகாரிகள் மீது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?” என்றார்.
இதனிடையே ஆம் ஆம் கட்சி டெல்லியில் தங்கள் 100 நாள் ஆட்சியின் சாதனைகளை நேற்று பட்டியலிட்டுள்ளது. “டெல்லியில் தடையற்ற மின்சார விநியோகம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை, வர்த்தக வரிவிதிப்பு நடைமுறைகள் சீரமைப்பு, துவாரகாவில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பு, அரசு மருத்துவமனைகள், பஸ்கள், பஸ் நிலையங்களில் அடிக்கடி சோதனை நடத்தி தரமான சேவை வழங்கச் செய்தது” என சாதனைகளை பட்டியலிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT