Published : 14 May 2014 09:16 AM
Last Updated : 14 May 2014 09:16 AM

காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்

தன்னை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் சொல்படி திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான் செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அந்த இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பூங்கா, திரையரங்கம், ஷாப்பிங் மால்கள், கோயில், குளங்கள் என சந்தோஷமாக சுற்றினர். காதலன் தன் அன்பின் அடையாளமாக காதலிக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கினாராம்.

இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்தனர். இந்த விஷயம் தெரிந்த காதலன், அந்த திருமணத்தை நிறுத்த பல்வேறு வழிகளை கையாண்டுள்ளார். ஆனால் பலனில்லை. காதலியும் ‘என்னை மறந்து விடு’ என் ஒரு வரியில் கூறிவிட்டாராம்.

இந்நிலையில் அப்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தான் செலவு செய்த சுமார் ரூ. 2 லட்சத்தை தனக்கு வாங்கித் தரவேண்டும் என்று என்று ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு அந்த இளைஞர் புகார் செய்தார்.

இந்த புகாரை பார்த்து திகைத்த போலீஸார், செய்வதறியாது அந்த இளைஞருக்கு புத்திமதி கூறினர். ஆனாலும் புகாரை திரும்பப் பெற அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “இதுவே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால், என்னை சும்மா விட்டிருப்பீர்களா? இந்தப் புகாரை பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுங்கள். இதுபோன்று மற்ற பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது” என போலீஸாருக்கே அறிவுரை வழங்கியுள்ளார் அந்த இளைஞர். இதனால் ஹைதராபாத் போலீஸார் என்ன வழக்குப் பதிவு செய்வது என்று குழம்பிப்போய் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x