Published : 16 May 2015 09:01 AM
Last Updated : 16 May 2015 09:01 AM

மோடிக்கு நல்ல காலம், மக்களுக்கு அல்ல: தெலங்கானா பாதயாத்திரையில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததால் பிரதமர் நரேந்திர மோடிக்குதான் நல்ல காலம் பிறந்துள்ளது, நாட்டு மக்களுக்கு அல்ல என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும் பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கொரிட்டிகல் கிராமத்தில் இருந்து பட்டியால் கிராமம் வரை 15 கி. மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி நேற்று பாதயாத்திரை மேற்கொண்டார். அவருக்கு தெலங்கானாவில் வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் தெலங்கானா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் பாத யாத்திரையில் பங்கேற்றனர்.

அப்போது ராகுல் காந்தி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ. 2 லட்சம் நிதி உதவி அளித்தார். பின்னர் அவர் பட்யூல் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியது:

பாஜக அரசு விவசாயிகள், ஏழைகளுக்கு எதிராகச் செயல் பட்டு வருகிறது. விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி தொழிலதிபர்களுக்கு தாரை வார்த்து கொடுக்க தயாராகுகிறது. இதற்கு காங்கிரஸ் ஒருபோதும் ஒத்துழைக்காது. நாடு தொழில் வளம் பெற காங்கிரஸ் குறுக்கிடாது. ஆனால் விவசாயிகளின் நிலங் களை கையகப்படுத்துவதை ஒப்புக் கொள்ள முடியாது. விவசாய உற்பத்திகளுக்கு நஷ்டம் வராத வகையில் விலை நிர்ணயம் செய்யப்போவதாக மோடி அறிவித்தார். ஆனால் ஓராண்டு ஆகியும் இதனை கண்டு கொள்ளவில்லை. மோடி அரசு தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

நான் நாடாளுமன்றத்தில் கூறியது போன்று, மோடி அரசு பணக்காரர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது. ஏழைகள், விவசாயி கள், விவசாய கூலிகளுக்கு இந்த அரசு இதுவரை எதுவும் செய்ய வில்லை. வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஆட்சி அமைத்தவுடன் வேலை வழங்குவ தாக மோடியும் தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவும் தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை உங்களில் யாருக்கேனும் ஒருவருக்காவது வேலை கிடைத்துள்ளதா?

ரூ. 10 லட்சத்தில் யாராவது கோட் அணிவார்களா? ஆனால் நமது பிரதமர் அணிவார். இவர் ஏழைகளை கண்டு கொள்வதில்லை. ’மேக் இன் இந்தியா’ எனும் பெயரில் நமது நாட்டை வெளிநாட்டில் அடகு வைக்க முயற்சிக்கிறார். மத்தியில் மோடி, இங்கு (தெலங்கானாவில்) கே. சந்திரசேகர ராவ் ஒரு மினி மோடி. இருவரும் மக்களுக்கு கொடுத்த வாக்கை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

பிரதமர் மோடி, நல்ல நாள் பிறக்கும் என கூறிவிட்டு சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு பயணங் களில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் உண்மையில் மோடிக்கு தான் நல்ல காலம் பிறந் துள்ளது, நாட்டு மக்களுக்கு அல்ல. நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்காக காங்கிரஸ் தொடர்ந்து குரல் எழுப்பும். காங்கிரஸ் அரசு தெலங்கானாவை வழங்கியது. தெலங்கானா மக்களுக்காக நானும் பாடுபடுவேன். இங்கு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை இங்குள்ள பாஜ, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்திருந்தால் நான் வர வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தற்போது நாட்டு மக்கள் எதற்காக பாஜகவுக்கு வாக்களித்தோம் என யோசிக்க தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x