Last Updated : 04 May, 2015 06:12 PM

 

Published : 04 May 2015 06:12 PM
Last Updated : 04 May 2015 06:12 PM

ஓடும் பஸ்ஸில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பஞ்சாபில் ஓட்டுநர், நடத்துநர் கைது

பஞ்சாபில் ஓடும் பஸ்ஸில் மேலும் ஒரு பெண்ணுக்கு பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து புகார் செய்தும் கண்டுகொள்ளாததால் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீஸார் கைது செய்துள்ளனர். எனினும் அந்தப் பயணி தப்பிவிட்டார்.

இதுதொடர்பாக அந்தப் பெண் போலீஸில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:

தலைநகர் சண்டீகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள கன்னா மாவட்டம் சிர்ஹிந்த் என்ற இடத்திலிருந்து லூதியானா அருகே உள்ள சானேவாலுக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார் 30 வயதுடைய ஒரு பெண்.

அப்போது அந்தப் பெண்ணின் இருக்கைக்கு அருகே உட்கார்ந்த ஒரு பயணி, அவரை தகாத முறையில் தொட்டுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததும் அந்த நபர் பின் இருக்கைக்கு சென்று அமர்ந்துவிட்டார். எனினும், கீழ்த்தரமான வார்த்தைகளால் அந்தப் பெண்ணை விமர்சனம் செய்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து பஸ் நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் புகார் செய்துள்ளார் அந்தப் பெண். ஆனால் அவர்கள் இதைப் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து தனது கணவரை செல்போனில் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறியுள்ளார். அவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து, அந்த பஸ் பயணித்த சாலையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். பஸ் நெருங்கியதும் போலீஸார் நிறுத்துமாறு சைகை காட்டியதும் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார் ஓட்டுநர். பின்னர் போலீஸார் விரட்டிச் சென்று அந்த பஸ்ஸை நிறுத்தி, ஓட்டுநர் ஜக்விந்தர் சிங் மற்றும் நடத்துநர் குல்விந்தர் சிங் ஆகிய இருவரையும் கைது செய்ததாக கன்னா மாவட்ட காவல் துறை அதிகாரி ஜி.எஸ்.கில் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயணி தப்பிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் நிறுவனத்துக்குச் சொந்தமான பஸ்ஸில் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு கீழே தள்ளியதில் 14 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிறுமியின் தாய் உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடந்து 5 நாட்களான நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x