Published : 13 May 2015 08:20 AM
Last Updated : 13 May 2015 08:20 AM

ஹைதராபாத் சூதாட்ட சண்டையில் இறந்தவர் உடலில் 9 பலத்த காயம்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

ஹைதராபாத் நகரில் சூதாட்ட சண்டையில் இறந்த இளைஞரின் உடலில் 9 பலத்த காயம் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் இறந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத், பாத்த பஸ்தி பகுதியை சேர்ந்தவர் யூசப். இவர் துபாயில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நபில் (17). கடந்த 3-ம் தேதி நடந்த சூதாட்ட சண்டையில் நபில் உயிரிழந்தார்.

தகவலறிந்து துபாயில் இருந்து வந்த யூசப், மகனின் இறுதிச்சடங்கை நடத்தி முடித்தார். இதற்கிடையில் சூதாட்ட சண்டையில் நபில் மரணமடைந்த வீடியோ காட்சிகள் செல்போனில் பரவின.

இதையடுத்து, மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் யூசப் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் ஹைதராபாத்தில் பரவி வரும் சூதாட்ட தெருச் சண்டையில்தான் நபில் இறந்த விஷயம் தெரிய வந்தது. இந்த சண்டையை செல்போனில் படம்பிடித்த காட்சிகள் அப்பகுதியில் பரவின. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு வரை 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே புதைக்கப்பட்ட நபிலின் உடல் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டு, உஸ்மானியா மருத்துவமனை மருத்துவக் குழுவினர் அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதன் அறிக்கையை பிரேதப் பரிசோதனை குழுவின் தலைவர் டாக்டர் தேவராஜ் போலீஸாரிடம் நேற்று வழங்கினார்.

இந்த அறிக்கையில், “தலை, வயிறு, மார்பு பகுதிகளில் நபில் அகமது பலமாக தாக்கப்பட்டுள்ளார். மார்பு பகுதி யில் 4, தலையில் 2, வயிற்றில் 3 இடங்களில் பலமான அடி விழுந்துள்ளது. இந்த 9 அடிகள் காரணமாகவே அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் (தெற்கு) காவல் துணை ஆணையர் சத்யநாராயணா, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய உத்தரவிட்டார். இதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ரூ. 15,000 ரொக்கம், பிரியாணி

இதனிடையே ஹைதராபாத்தில் தற்போது வேகமாக பரவி வரும் சூதாட்ட சண்டையில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 15,000 ரொக்கமும், ஒரு பிரியாணி பொட்டலமும் வழங்கப்படுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தோல்வி அடைபவருக்கு ரூ. 5,000 வழங்கப்படுவதுடன் மருத்துவ செலவு ஏற்கப்படு கிறது. இதனால் பல இளைஞர் கள் இதில் ஆவலுடன் பங்கேற்கின்றனர்.

இந்த சூதாட்ட சண்டையில் நபில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா? இதில் காதல் பின்னணி ஏதாவது உள்ளதா? என்ற கோணங்களிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x