Published : 16 May 2015 04:19 PM
Last Updated : 16 May 2015 04:19 PM
அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கான சமூகப் பொருளாதாரக் கொள்கைகள் இன்னும் முறையாக வகுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது, அதன் மூத்த தலைவரான யோகேந்தர் யாதவால் உருவாக்கப்பட்டும் இன்னும் அது அக்கட்சியின் பொதுக்குழுவில் அமல்படுத்தப்படாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அன்னா அசாரே நடத்திய போராட்டத்தில் உருவானது ஆம் ஆத்மி கட்சி. இதனால், அது ஊழலுக்கு எதிரான கட்சியாக முன்னிறுத்தப்பட்டாலும் அதற்கு பொருளாதாரம், கல்வி, மருத்துவம், காவல், தொழில் உட்படப் பல்வேறு துறைகளில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியாமல் உள்ளது.
இதனால், நாட்டின் தலைநகராக இருக்கும் முக்கிய மாநிலமான டெல்லியை தனி மெஜாரிட்டியுடன் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுதியான கொள்கைகள் எதுவும் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது.
புதிதாகத் துவக்கப்படும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமக்கெனத் தனியாக ஒரு சமூக பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கி அதை தம் தேசிய செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் அமல்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
காலத்துக்கு ஏற்றபடி அதில் அவ்வப்போது சில மாற்றங்களும் செய்து தம் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் அமல்படுத்திக் கொள்வது வழக்கம். சில கட்சிகள் ‘கொள்கை விளக்கக் கோட்பாடு’ எனும் பெயரில் சிறிய பதிவாக வெளியிடுவதும் உண்டு. இதை தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் போதும் அதன் மனுவுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், இந்த கொள்கைகளில் தேசத்திற்கு எதிரானதாக எதுவும் இடம் பெற்றிருப்பின் அக்கட்சிக்கு பதிவு செய்யப்பட மாட்டாது. எனினும், அதை பெரும்பாலான கட்சிகள் தமது பதிவின் போது ஒரு சடங்கிற்காக என ஏதோ ஒன்றை தயாரித்து சமர்ப்பித்து கொள்வதும் பிறகு, அதில் பல மாற்றங்கள் செய்து முறையாக அமல்படுத்திக் கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இவ்வாறு சடங்கிற்காக ஆம் ஆத்மி கட்சிப் பதிவின் போது மட்டும் பயன்படுத்தப்பட்ட கொள்கைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகும் அது இன்னும் அமல்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களின் வட்டாரம் கூறுகையில், ‘கட்சிக்காக கொள்கைகளை உருவாக்கும் பொறுப்பு யோகேந்தர் யாதவின் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு அவரிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இதற்காக கடுமையாக உழைந்தவர் கடந்த செப்டம்பர், 2012-ல் கட்சியிடம் சமர்ப்பித்து விட்டார். ஆனால், அதை இன்னும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.’ இதற்கு கேஜ்ரிவால் மற்றும் அவரை சுற்றியுள்ள தலைவர்கள் தான் காரணம்’ எனப் புகார் கூறுகின்றனர்.
இந்த கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு விட்டால் அதற்கு எதிரானவர்கள் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காமல் போக வாய்ப்புகள் இருந்தன. இதனால், தேர்தலுக்கு பின் அமல்படுத்திக் கொள்ளலாம் என ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
2013 தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த கேஜ்ரிவால் 49 நாட்களுக்கு பின் ராஜினாமா செய்தார். பிறகு அமல்படுத்தப்பட்ட குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பின்பும் டெல்லி தன் சட்டப்பேரவை தேர்தலை எதிர்பார்த்து இருந்தமையால், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது, அதை உருவாக்கிய யோகேந்தர் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உருவாக்கியதை அமல்படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் நம்புகின்றனர். இதில் மேலும், சில முக்கிய மாற்றங்கள் செய்த பின் வரும் காலங்களில் கேஜ்ரிவால் அதை அமல்படுத்தலாம் என ஆம் ஆத்மி கட்சியினர் எதிர் நோக்கி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT