Last Updated : 16 May, 2015 08:51 AM

 

Published : 16 May 2015 08:51 AM
Last Updated : 16 May 2015 08:51 AM

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் கடத்தப்படும் கள்ளத் துப்பாக்கிகள்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு அவை நாடு முழுவதும் கடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியின் சிறப்பு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், டெல்லியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள சித்தார்த் நகரில் நயீம் (21) என்பவர் கைது செய்யப்பட்டார். உ.பி.யின் மதுராவை சேர்ந்த நயீமிடம் 7.66 எம்.எம். வகை செமி ஆட்டோமேடிக் துப்பாக்கிகள் 22 கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மாநிலங்களில் விற்பனைக்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டவை என விசாரணை யில் தெரியவந்தது. இவற்றை கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ளத் துப்பாக்கிகளில் சில வற்றில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட் டவை எனவும் மற்றவை அமெரிக்கா வில் தயாரிக்கப்பட்டவை எனவும் பொறிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து `தி இந்து’விடம் டெல்லி மாநில காவல்துறை சிறப்பு பிரிவின் ஆணையர் எஸ்.என்.வாத்ஸவா கூறும்போது, “கள்ளத் துப்பாக்கி கடத்தலில் ஈடுபட்ட 45 பேர் கடந்த ஓராண்டில் கைது செய்யப்பட் டுள்ளனர். இவர்களிடம் 285 நவீன வகை கள்ளத் துப்பாக்கிகள், 7 சாதாரண துப்பாக்கிகள் மற்றும் 1090 தோட்டாக் களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கடத்தலுக்காக ம.பி. வழியாக டெல்லி வரும் லாரி ஓட்டுநர்களுடன் இவர்கள் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர்” என்றார்.

இந்த கள்ளத் துப்பாக்கிகள் ம.பி. மாநிலத்தின் தார், கர்கோன், பர்வானி, புர்ஹான்பூர், செந்த்வா ஆகிய மாவட்டங்களில் தயாரிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இங்கு தயாரிக்கப் படும் துப்பாக்கிகள் கடந்த 5 ஆண்டுக ளாக போலீஸாரால் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

மேற்கு ம.பி.யின் கண்ட்வா பகுதி மற்றும் மகாராஷ்டிர எல்லையில் உள்ள மாவட்டங்களில் பரவலாக வாழும் சிக்லிகார் எனும் சமூகத்தினர் சிறிய அளவிலான கத்தி, அரிவாள் போன்றவற்றை தயாரித்தல் மற்றும் அவற்றை சாணை பிடிக்கும் தொழிலில் பல நூற்றாண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினர் கள்ளத்தனமாக துப்பாக்கி தயாரித்து வருகின்றனர். இவர்கள் ம.பி. போலீஸாரால் அடிக்கடி கைது செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக நவீனரக துப்பாக்கிகளையும் செய்யத் தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இவை அந்தப் பகுதி வழியாக டெல்லிக்கு வரும் லாரிகள் உதவியுடன் கடத்தப்படுகின்றன. டெல்லியில் இருந்து உ.பி., ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், இதேமுறையில் தென் மாநிலங் களுக்கும் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சட்டவிரோத தொழிலை முறியடிக்கும் முயற்சியில் டெல்லி, உ.பி., சண்டீகர், மும்பை, புனே மற்றும் குஜராத் போலீஸார் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கள்ளத் துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர். இவற்றில் டெல்லியில் சிக்கியவை மிகவும் அதிகம். இங்கு கடந்த 2013-ல் மட்டும் 688 துப்பாக்கிகள் மற்றும் 1,251 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிஹாருக்கு போட்டியா?

வட மாநிலங்களில் நடைபெறும் குற்றச் செயல்களில் பயன்படுத் தப்படும் கள்ளத் துப்பாக்கிகள் பெரும்பாலும் பிஹாரின் முங்கேரில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன. முங்கேர் மாவட்டம் கள்ளத் துப்பாக்கி தயாரிப்புக்கு மிகவும் பெயர் பெற்றது.

இங்கு தயாரிக்கப்படும் ஏ.கே-47 போன்ற நவீன ரக துப்பாக்கிகள் சமீப காலமாக பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது. தற்போது ம.பி.யில் தயாரிக்கப்படும் கள்ளத் துப்பாக்கிகளும் சிறந்த வகையில் இருப்பதுடன் பிஹாரை விட குறைந்த விலையில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கள்ளத் துப்பாக்கி தயாரிப்பில் பிஹாருக்கு போட்டியாக ம.பி. வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x