Last Updated : 21 Apr, 2015 08:07 AM

 

Published : 21 Apr 2015 08:07 AM
Last Updated : 21 Apr 2015 08:07 AM

பெங்களூரு அருகே சுங்கச்சாவடி மீது தாக்குதல்: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 10 பேர் கைது

பெங்களூரு அருகே தனியார் சுங்கச்சாவடியை கிராம மக்கள் நேற்று முன்தினம் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர்.

இது தொடர்பாக 10 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பெங்களூரு ஊரக மாவட்டம் ஹொசக்கோட்டை அருகே பூதிகெரே கிராமம் உள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4-ல் `லங்கோ' நிறுவனம் சுங்கச்சாவடி அமைத்து வாகனங் களுக்கு கட்டணம் வசூலித்து வரு கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் குட்ட‌நல்லூர் நகராட்சி உறுப்பினர் நாராயணசாமி சுங்கச்சாவடியை வாகனத்தில் கடந்துள்ளார். அப்போது அவர், “நான் அருகேயுள்ள‌ நகரின் நகராட்சி உறுப்பினர். சுங்கச்சாவடி நிர் வாகம் அளித்த அடையாள அட் டையை கொண்டு வரவில்லை'' எனக் கூறி கட்டணம் செலுத்த ம‌றுத்தாராம்.

அப்போது ஏற்பட்ட தகராறில் சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதை அறிந்த நாராயணசாமியின் மகன் மஞ்சுநாத் (20) சுங்கச்சாவடிக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் மஞ்சுநாத்தை அருகில் உள்ள அறைக்கு தூக்கிச்சென்று உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். கை முறிந்து, படுகாயத்துடன் அங்கிருந்து த‌ப்பிய மஞ்சுநாத் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மக்கள் கொந்தளிப்பு

இதனிடையே இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சுற்றுப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடிக்கு சென்று, அங்கு வசூல் மையங்களில் இருந்த கணிணி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் அவற்றுக்கு தீவைத்து கொளுத்தினர். தகவல‌றிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மீது சிலர் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கிராம மக்களை விரட்டினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் ஆனது.

சிசிடிவி கேமராவில் சிக்கினர்

இந்த சம்பவம் தொடர்பாக ஹொசக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். இதன் அடிப்படையில் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 10 பேரை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x